தேனி: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ளது கோடாங்கிபட்டி ஊராட்சி. இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2019ஆம் ஆண்டு சமுதாயக் கூட கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. ஏழை எளிய மக்கள் தங்கள் திருமண நிகழ்வுகள், வீட்டு விசேஷ நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை குறைந்த செலவில் நடத்திடும் வகையில் இந்த சமுதாய மண்டபம் கட்டப்பட்டது.
ஊராட்சி நிர்வாகத்திடம் பணம் செலுத்தி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட இந்த சமுதாய மண்டபம், கட்டப்பட்டதில் இருந்து ஒரு நாள் கூட பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த நான்கு வருடங்களாக இந்த மண்டபத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிகளும் நடத்த ஊராட்சி நிர்வாகமும் முன் வரவில்லை என்றும், கடந்த சில ஆண்டுகளாக பயன்பாடு இன்றி இருக்கின்ற இந்த மண்டபம் குப்பைக் கழிவுகளை கொட்டும் இடமாகவும், மது பிரியர்களின் கூடாரமாகவும் மாறி வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பாடு இன்றி இருக்கும் மண்டபம் குப்பைக் கிடங்கால் சூழ்ந்துள்ளதால், அசுத்தம் ஏற்பட்டு நோய்வாய்ப்படும் அபாயம் இருப்பதாகவும், பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப் பூச்சிகள் வருவதால் குடியிருப்புகளில் உள்ள சிறுவர், சிறுமிகள், வயதானவர்கள் அச்சம் அடைவதாக தெரிவிக்கின்றனர். எனவே, குப்பைக் கிடங்கால் சூழ்ந்து இருக்கும் மண்டபத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோடாங்கிபட்டி ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளி போல் வந்து ஆப்பிள் திருட்டு.. சிசிடிவி காட்சிகள் வைரல்! - KOYAMBEDU MARKET APPLE THEFT