சென்னை: கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி காலை 8.30 மணிக்கு, சென்னையிலிருந்து அந்தமான் நோக்கி, விமானப்படையின் ஏ.என்.32 ரக சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் ராணுவம், விமானப்படை, கடலோர காவல்படை, கடற்படை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 15 வீரர்கள் இருந்தனர். மேலும் கடற்படை ஆயுதக்கிடங்கில் பணியாற்றும் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 8 பணியாளர்களும் இருந்தனர். விமான ஊழியர்களுடன் 6 பேருடன் சேர்த்து மொத்தம் 29 பேர் பயணித்தனர்.
விமானம் சென்னை தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டு சரியாக 16 நிமிடங்களில், தரைத்தளத்துடனான கட்டுப்பாட்டை இழந்தது. சென்னையிலிருந்து 370 கி.மீ தொலைவில் வங்காள விரிகுடா கடற்பகுதியில் தரையிலிருந்து 23 ஆயிரம் அடி உயிரத்தில் பறந்த போது காணாமல் போனதாக கூறப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை கனத்த அமைதிதான்.
ஆழ்கடல் தேடுதல் பணியில் இந்தியாவின் திறன் குறித்த கேள்விகளும் எழுப்பப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, வங்கக்கடலின் ஆழத்திலிருந்து கிடைத்த ஒரு சிக்னல், 7 ஆண்டு மர்மத்திற்கு விடை எழுதியுள்ளதோடு, ஆழ்கடல் ஆராய்ச்சியில் இந்தியாவின் திறன் குறித்த புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது.
7 ஆண்டுகளுக்குப் பின் ஏ.என்.32 விமானம் கண்டுபிடிக்கப்பட்டதில் முக்கிய பங்காற்றியிருக்கிறது, சென்னையில் உள்ள தேசிய ஆழ்கடல் தொழில்நுட்பக் கழகம் (NIOT- National Institute of Ocean Technology). இது குறித்த பல்வேறு கேள்விகளுடன் அந்நிறுவனத்தை அணுகியது ஈடிவி பாரத்.
நமது கேள்விகளுக்கு உற்சாகமாக பதிலளித்த அந்நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜி.ஏ.ராமதாஸ், மத்திய பூகோள அறிவியல் துறையின் கீழ் வரும் தங்கள் நிறுவனம் செய்து வரும் பல்வேறு பணிகள் குறித்தும், இதன் நடுவே ஏ.என்.32 விமான உதிரிபாகம் கண்டுபிடிக்கப்பட்ட தருணங்கள் குறித்தும் விளக்கினார்.
நார்வேயிலிருந்து சமீபத்தில் வாங்கப்பட்டுள்ள ஆழ்கடல் நீர் மூழ்கி ஆராய்ச்சி கருவியான (Autonomous Underwater Vehicle - AUV) தானியங்கி நீர்மூழ்கி வாகனம், இந்த நிகழ்வில் முக்கிய பங்காற்றியுள்ளது. இது குறித்து பேசிய முனைவர் ஜி.ஏ.ராமதாஸ், ஆழ்கடலில் இருக்கும் வளங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவதுதான் தேசிய பெருங்கடல் தொழில்நுட்பக் கழகத்தின் தலையாயப் பணியாகும்.
உயிருள்ள மற்றும் உயிரற்ற வளங்களை ஆராய்ச்சி செய்து, தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறோம். உயிரற்ற வளங்களை ஆய்வு செய்வதற்கான பணியின் ஒரு அங்கமாக, கடலுக்கடியில் பயணித்து ஆராய்ச்சி செய்யக்கூடிய நீர் மூழ்கிகளை கட்டமைத்து வருவதாக குறிப்பிட்டார்.
இது தவிர, சமீபத்தில் ஓஷன் மினரல் எக்ஸ்புளோரர் (OME-6000) என்ற ஆராய்ச்சி வாகனத்தை நார்வே நாட்டிலிருந்து NIOT வாங்கியிருப்பதாகவும், கடலடியில் உள்ள பல்உலோக படிமங்கள் (Polymetallic Nodules) போன்றவற்றையும், வங்காள விரிகுடாவில் உள்ள வாயுப்படிமங்களையும் ஆராய்ச்சி செய்யும் நோக்குடன் இந்த எந்திரம் வாங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஏ.என்.32 குறித்து பேசும் போது, "இந்த வாகனத்தை சோதனை முயற்சியாகவும், கடலுக்கடியில் இயங்குவது குறித்து ஆராய்வதற்காகவும் 3,500 மீட்டர் ஆழத்தில் விஞ்ஞானிகள் குழு களமிறக்கியது. மல்டி பீம் சோனார் (சவுண்ட் நேவிகேஷன் மற்றும் ரேங்கிங்) உட்பட பல பேலோட்களைப் (Payloads) பயன்படுத்தி 3,400 மீட்டர் ஆழத்தில் செயற்கை துளை சோனார் மற்றும் உயர் தெளிவுத்திறன் புகைப்படம் எடுத்தல் முறையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தேடல் படங்களை பகுப்பாய்வு செய்ததில், சில வலிமையான சிக்னல்கள் எங்களுக்கு கிடைத்தன. இது கண்டிப்பாக இயற்கையான படிமங்களால் கிடைப்பது அல்ல, ஏதோ பொருள் தென்படுகிறது என்ற முடிவுக்கு வந்த நாங்கள், மீண்டும் கடலடியில் இந்த ஆராய்ச்சி வாகனத்தை களமிறக்கினோம்.
இம்முறை ஆழ்கடலின் தளத்திலிருந்து 5 மீட்டர் உயரத்திலிருந்து கேமரா உதவியுடன் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இந்த புகைப்படங்களை ஆராய்ச்சி செய்த போது, இது விமானத்தின் பாகம் என உறுதி செய்ததோடு, பூகோள அறிவியல் ஆராய்ச்சி அமைச்சகம் மூலமாக, பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்தோம்.
பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் விமானப்படையினர் இந்த சிதிலமடைந்த பாகம் 2016-இல் காணாமல் போன ஏ.என்.32 விமானத்துடையதுதான் என உறுதி செய்தனர். 2016-இல் விமானம் காணாமல்போன போதும், எங்களின் சாகர் நிதி கப்பல் மூலமாக தேடும் பணியில் ஈடுபட்டோம்.
ஆனால் அப்போது எங்களால் இவ்வளவு ஆழத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள இயலவில்லை. ஆனால், எங்களின் அறிவியல் ஆராய்ச்சிக்காக சமீபத்தில் வாங்கப்பட்ட இந்த வாகனத்தின் மூலம், தற்செயலாக எங்களால் விமான சிதிலத்தைக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது" என்றார்.
விமானப்படை உறுதி செய்தது எப்படி? ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்டது ஏ.என்.32 விமானத்தின் பாகம்தான் என்பதை விமானப்படை உறுதி செய்தது என்பது தொடர்பாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசிய போது, புகைப்படங்களை முதலில் அணுகிய விஞ்ஞானிகள், இதனை கப்பலின் சிதிலமான பாகமாக இருக்கலாம் என கருதினர்.
ஆனால் கூர்ந்து நோக்கும் போது, விமானப்படைக்கே உரிய அடையாளங்களும், மூவர்ணக் கொடியும் இதன் பாகங்களில் காணப்பட்டதை வைத்து ஒரு முடிவுக்கு வர முடிந்தது என கூறினர். மேலும், சம்பவ இடத்தில் வேறு எந்த விமான விபத்துக்களும் பதிவானதில்லை என்பதையும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து, தற்போது கிடைத்திருக்கும் சிதிலமான பாகங்கள் விபத்தில் சிக்கிய அதே ஏ.என்.32 விமானத்தின் பாகங்கள்தான் என்பதையும் உறுதி செய்துள்ளனர்.
ஆழ்கடல் ஆராய்ச்சி வாகனம் இயங்குவது எப்படி? நார்வேயிலிருந்து வாங்கப்பட்டுள்ள ஓஷன் மினரல் எக்ஸ்புளோரர் (OME-6000) செயல்பாடுகள் குறித்து, அறிவியலறிஞர் டி.எஸ்.டி.ரமேஷ் சேதுராமனிடம் ஈடிவி பாரத் பேசியது. அப்போது விரிவான விளக்கம் அளித்த அவர், "கடலுக்கு அடியில் 6 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் உள்ள தாதுக்களைக்கூட கண்டுபிடிக்கும் திறனை இந்த தானியங்கி ஆளில்லா வாகனம் கொண்டுள்ளது.
தானியங்கி ஆளில்லா வாகனத்தை கடலுக்கு அடியில் செலுத்துவதற்கு முன்னர், தேவையான புரோகிராம் கம்ப்யூட்டரில் செய்யப்படும். அதன் அடிப்படையில், கடலில் குறிப்பிட்ட இடத்தில் வாகனத்தை கப்பலில் இருந்து இறக்கி விடுவோம். அது தொடர்ந்து திட்டமிட்டபடி கடலுக்கு அடியில் சென்று, புகைப்படங்களை எடுத்து அனுப்பும். அதனைக் கொண்டு வந்து பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்வோம். அப்போது கடலுக்கு அடியில் உள்ள தாதுக்கள் தெரிய வரும்.
மேலும், சமீபத்தில் கடலுக்குச் சென்ற போது 3 ஆயிரம் மீட்டரில் மனிதனால் உருவாக்கப்பட்ட தாமிர தகடுகள் இருப்பதை சென்சார் காண்பித்தது. அதனைத் தொடர்ந்து, கடல் தரைப் பரப்பிலிருந்து 5 மீட்டர் உயரத்தில் வருமாறு கீழே இறக்கி படம் பிடித்தோம். அப்போது ஏ.என்.32 விமானத்தின் உதிரிபாகங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தோம். அதனை பாதுகாப்புத்துறைக்கு அனுப்பி உறுதி செய்துள்ளோம். கப்பலில் இருந்து இறக்கியதும் மனிதத் தலையீடு இன்றி தானாகவே இந்த நீர்மூழ்கி இயங்கத் துவங்கும். இது செல்லும் திசையை மட்டும் Acoustic Signals என்ற தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்க முடியும்" என அவர் கூறினார்.
ஏ.என்.32 விமானம் ஒரு பார்வை: ராணுவ சரக்குப் போக்குவரத்து விமானமான AN-32 , 1984ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் படிப்படியாக விமானப்படையில் இணைக்கப்பட்டது. அது முதல் விமானப்படையின் பல்வேறு பணிகளுக்காக, வடிவமைப்பு மற்றும் திறன் ரீதியாக மேம்படுத்தப்பட்டு இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் செயல்பாட்டுத் திறனை உறுதி செய்யும் விதமாக, உலகின் மிக உயரமான போர்க்களங்களில் ஒன்றான லடாக்கின் தவ்லத் பெக் ஒல்டி (Daulat Beg Oldie) விமானத் தளத்திலும் தரையிறக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விமானத்தின் பறப்பதற்கான தகுதி குறித்து சந்தேகப்படத் தேவையில்லை என விமானப்படை கூறியுள்ளது.
தேசிய பெருங்கடல் தொழில்நுட்பக் கழகத்தின் பணிகள்: NIOT அமைப்பின் பணிகள் குறித்து விளக்கிய அறிவியலாளர் என்.ஆர்.ரமேஷ், ஆழ்கடலில் பல்உலோக முடிச்சுகள், கோபால்ட் நிறைந்த மாங்கனீசு போன்ற ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. கனிமப்படிவு முடிச்சுகளில் தாமிரம், கோபால்ட், நிக்கல் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்கள் காணப்படுகின்றன.
அவற்றை பயன்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். சர்வதேச கடற்பரப்பில் இந்தியாவுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஆழ்கடல் பரப்புகளில் இந்த ஆய்வு நடைபெறுகிறது. கடலுக்கடியில் உள்ள இந்த வளங்களைப் பயன்படுத்துவது பொருளாதார ரீதியாகவும், நடைமுறையிலும் சிக்கனமானதாக இருக்குமா உள்ளிட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வது மட்டுமே எங்களின் பணி என கூறினார்.
ஆழ்கடல் ஆராய்ச்சிக்காக வாங்கப்பட்டுள்ள இந்த புதிய உபகரணம், ஓஷன் மினரல் எக்ஸ்புளோரர் (OME-6000) சோதனை முயற்சியிலேயே தனது திறனை நிரூபிக்கும் வகையில் 7 ஆண்டு மர்மத்திற்கு விடை கண்டுபிடித்துள்ளது. வரவிருக்கும் நாட்களில் ஆழ்கடல் ஆராய்ச்சியில் மேலும் சாதனைகளைப் படைக்கும் அளவிற்கு இந்தியாவின் திறன் மேம்படும் என நம்பலாம்.
இந்த செய்தியை நீங்கள் இந்தி, அஸ்ஸாமி , பங்களா , குஜராத்தி , கன்னடம், மலையாளம் , மராத்தி , ஒரியா , பஞ்சாபி , தமிழ் , தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளிலும் படிக்கலாம்.