திருச்சி: சேலம் மாவட்டம், எல்லம்பள்ளியைச் சேர்ந்தவர் கார்த்தி (37). இவர் சப்மியூகோசல் லியோமியோமா (Submucosal Leiomyoma) என்னும் உணவுக்குழாய் கட்டியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த கட்டியை திருச்சி தில்லை நகர்ப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர் SNK.செந்தூரன், 'STER' (Submucosal Tunneling Endoscopic Resection) எனப்படும் புதிய எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளார். இந்த அறுவை சிகிச்சையை தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னையில் செய்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் SNK.செந்தூரன் இந்தியாவிலேயே எண்டோஸ்கோபிக் மூலம் அறுவை சிகிச்சை செய்யும் வெகு சில மருத்துவர்களில் ஒருவர் ஆவார். சவாலான மற்றும் புதிய சிகிச்சை முறைகளில் தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தில்லைநகர் தனியார் மருத்துவமனையில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய டாக்டர் SNK செந்தூரன், "இந்த உணவுக்குழாய் கட்டியை அகற்றுவதற்கு தோரகடாமி எனப்படும் நெஞ்சுக்கூட்டை திறந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென அவர் சென்ற வேறு மருத்துவமனையில் பரிந்துரை செய்துள்ளனர்.
தினமும் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலையிலிருந்த அவருக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியையும், மனவேதனையும் அளித்தது. இந்த நிலையில் இப்பிரச்னைக்கு எண்டோஸ்கோபிக் மூலம் அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்ற முடியும் என்பதை ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்ட அவர் எங்களை தொடர்பு கொண்டார்.
தொடர்ந்து எண்டோஸ்கோபிக் மூலம் உணவுக்குழாயில் இருந்த 2 செ.மீ கட்டி அகற்றப்பட்டது. இதனால் நெஞ்சுக்கூட்டை திறந்து செய்ய வேண்டிய மாபெரும் அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டது. எண்டோஸ்கோபிக் மூலம் செய்வதினால் தழும்பு இல்லாமல், வலி இல்லாமல் அடுத்த நாளே அவர் வீட்டிற்கு திரும்பினார். அவர் தின வேலைகளை மகிழ்ச்சியாக செய்ய தொடங்கி விட்டார்" என்றார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவரின் உறவினரான செந்தில்குமரன் கூறுகையில், "எனது உறவினர் உணவுக்குழாய் கட்டியால் கடந்த 6 மாதமாக பாதிக்கப்பட்டு வந்தார். நாங்கள் கோயம்புத்தூருக்கு சிகிச்சைக்காக சென்றோம். அங்கு, மருத்துவர் ஆபரேஷன் செய்ய வேண்டும் அதாவது பயாப்ஸி செய்ய வேண்டும் (biopsy) எனக் கூறினார்.
ஆனால், எங்களுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. பின்னர் என்ன செய்தவதென்று தெரியாமல் மன உளைச்சலில் இருந்தோம். பின்னர் இந்த மருத்துவமனைக்கு வந்தோம். டாக்டர் செந்தூரன் எங்களுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கி எண்டோஸ்கோபி மூலம் உணவுக்குழாய் கட்டியை அகற்றினார். தற்போது வழக்கம் போல எனது உறவினர் அவரது வேலைகளை செய்ய தொடங்கினார்" என தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மருத்துவமனையின் இயக்குநர்கள் A.S.நேதாஜி, S.தேவேந்திரன் மற்றும் மருத்துவக் குழுவினர் உடன் இருந்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்