விழுப்புரம்: விழுப்புரம் ஜிஆர்பி தெருவை சேர்ந்தவர் அப்பு என்கிற அற்புதராஜ். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வந்துள்ளார்.
ஆனால், அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், பலமுறை வாரண்ட் பிறப்பித்தும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் நேற்று மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு படையினர் அவரை வீட்டில் இருக்கும்போது கைது செய்து மேற்கு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
அதன் பிறகு விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இரவு முழுவதும் கிளைச்சிறையில் இருந்த அவர் அதிகாலை நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்காத நிலையில் அவரை சிறை காவலர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவருடைய உறவினர்கள் கூறுகையில், ''காவல் நிலையத்திற்கு ராஜாவை கொண்டு செல்லும்போது அவனுக்கு உடல்நிலை சரி இல்லை என்று நாங்கள் கூறினோம்.. ஆனாலும், எங்களை மீறி ராஜாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.. நாங்கள் நினைத்தது போன்று நடந்து விட்டது. ஆனால், ராஜா எப்படி உயிரிழந்தான் என்பது எங்களுக்கு தெரியவில்லை. தற்போது அவன் இறந்ததாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவனுடைய மரணம் குறித்து உண்மையான விசாரணை நடத்த வேண்டும்'' என்று கூறினர்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக பால் கனகராஜ் விசாரணைக்கு ஆஜர்!