சென்னை: கடந்த 2011ஆம் ஆண்டு பாஜக சார்பில் நடந்த ரத யாத்திரையின் போது, அத்வானி சென்ற பகுதியில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் ஜாகிர் உசேன் (37) என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர், பாதுகாப்பு கருதி கடந்த இரண்டு மாதங்களாக பூந்தமல்லியில் உள்ள தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு சிறையில் இருந்த ஜாகிர் உசேன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு அலறியுள்ளார். இதனையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் பேமிலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து சிறைக் காவல் அதிகாரிகள் விசாரணை கொண்டனர்.
இதையும் படிங்க: “அச்சத்தின் காரணமாக கைதிகள் குறைகளை சொல்வதில்லை” - உயர் நீதிமன்றம் கருத்து!
அப்போது, கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜாகீர் உசேனிற்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கியதாகவும், ஜாமீன் கிடைத்தும் அதற்கான உரிய ஆவணங்கள் மற்றும் தொகையை சமர்ப்பிக்க முடியாததால், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே செல்ல முடியாத விரக்தியிலிருந்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இது தொடர்பாக சிறைக்காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.