சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் கல்வி குறித்த எதிர்பார்ப்புகளும், பொதுமக்களின் கடமைகளும் என்ற தலைப்பில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் அறிக்கையினை, அதன் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளாக கல்வித் தளத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. தேசிய கல்விக்கொள்கை 2020, தொடக்கப் பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
தேசிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்ததன் தாக்கத்தை, கடந்த 2 ஆண்டுகளாகப் பார்த்தோம். அதன் உச்சம் தான் சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கு வருமான வரித்துறையால் முடக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
2016 முதல் பல்கலைக்கழக மானியக் குழு கொடுத்து வந்த நிதி கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டது. இதனால் நிதிச்சுமையைச் சமாளிக்க சுயநிதி பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்ட நிகழ்வு நடக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இந்த ஆபத்து இருக்கிறது. பல்கலைக்கழகங்களுக்கு மாநில அரசு நிதியை அளிக்க முடியாத நிலையில், நிதி நெருக்கடியில் உள்ளது.
ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்தியாவின் மனசாட்சியை உலுக்கி, ஜாலியன் வாலாபாக்கிற்கு எதிராக மகாத்மா காந்தியை ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுக்க காரணமாக அமைந்தது. மக்களின் போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்க வேண்டும். 420 எம்.பிக்களின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த பிரதமர் ராஜூவ் காந்தி, ஒரேயொரு கம்யூனிஸ்ட் எம்.பியின் கடிதத்தால், எல்.ஐ.சிக்கு எதிரான முடிவைக் கைவிட்டார்.
விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொன்றவர் இன்று பாஜக வேட்பாளர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள் குரலை அரசு கேட்கும் என்ற இந்தியாவின் அரசியலமைப்பை மோடி சிதைத்துள்ளார். தாங்கள் சொல்வதுதான் சட்டம் என்ற மனநிலைக்கு மோடியும், அமித்ஷாவும் வந்துவிட்டனர்.
இனிமேலும் அவர்களை விட்டுவைத்தால் இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளில் மக்கள் அனுபவித்த துன்பத்தைப் போல இந்தியர்களும் சந்திக்க நேரிடும். ஆகவே, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டங்களின் விழுமியங்களைத் தாங்கி நிற்கும் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
மேலும், இந்தியா கூட்டணிக் கட்சிக்கு அதன் தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பொதுப் பள்ளிக்கான மாநில மேடை முடிவெடுத்துள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம்!