சென்னை: நாடாளுமன்ற தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1ம் தேதி 57 தொகுதிகளில் நடக்கவிருக்கிறது. இதற்கிடையே பிரதமர் மோடி கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த விவேகானந்தர் நினைவு பாறையில் அமர்ந்து தியானம் செய்யவுள்ளார்.
எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் ஜூன் 1 அன்று கடைசி கட்ட வாக்கு பதிவு நடக்கவுள்ளதால் தேர்தல் பிரச்சாரங்கள் இன்றோடு (மே30) முடிகிறது. குறிப்பாக பிரதமர் மோடி போட்டியிட்டுள்ள வாரணாசியிலும் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு கன்னியாகுமரிக்கு வருகை தரவுள்ளார். விவேகானந்தர் நினைவு பாறையில் அவர் 2 நாட்கள் தியானம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் பலத்த பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிறகு இதுபோன்ற தியானங்களில் ஈடுபடுவது கவனம் பெற்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு கேதார்நாத் குகையில் தியானம் செய்தார். இதற்காக அவர் கேதார்நாத் சன்னதியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் பயணித்து குகைக்கு சென்றார்.
மோடி தியானம் செய்த அந்த குகைக்கு ருத்ரா (சிவன்) குகை என்று பெயர். இந்த குகை 2018 ஆம் ஆண்டு செயற்கையாக கட்டப்பட்டது. 12,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த குகையில் ஒருவர் மட்டும் தங்குவதற்கான அறை, தொலைபேசி, மின்சாரம் மற்றும் உணவு உள்ளிட்ட வசதிகளை உத்தரகாண்ட் அரசு ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த முறை பிரதமர் மோடி தியானத்துக்கு கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு பாறையை தேர்ந்தெடுத்துள்ளதால் அப்பகுதி தற்போது மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. அத்துடன் கடைசி கட்டமாக நடைபெறவுள்ள இந்த வாக்குபதிவில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசியும் அடங்கியிருப்பதால் இந்த பயண நிகழ்வு அவர் மீதான கவனத்தை ஈர்க்கும் என்பதில் ஆச்சரியமில்லை.
இதையும் படிங்க: மோடி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்" - உயர்நீதிமன்ற பதிவாளரிடம் காங்கிரஸ் மனு