கோயம்புத்தூர்: கோவை கணபதியைச் சேர்ந்தவர் யோகநாதன். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மருதமலை கிளையில் பேருந்து நடத்துநராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது புற்றுநோய் பாதிப்பு காரணமாக நடத்துநர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அலுவலகப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
யோகநாதன் தனது சிறுவயது முதல் மரங்கள் மீது கொண்ட தீராக்காதலால், தனது பணிக்கு நிகரான நேரத்தையும், தனது ஊதியத்தின் ஒரு பகுதியையும் மரங்கள் வளர்ப்பிற்குச் செலவிட்டு வருகிறார். அந்த வகையில், ஏறத்தாழ 36 ஆண்டுகளாக மரங்களைப் பாதுகாக்கும் பெரும் பணியைச் செய்து வருகிறார் நடத்துநர் யோகநாதன்.
இவர் பொது இடங்கள், அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட இடங்களில் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நடவு செய்தது மட்டுமின்றி, தொடர்ந்து அவற்றை பராமரித்தும் வருகிறார். இதுமட்டுமல்லாது விதை நேர்த்தி, மரம் நடுதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இலவசமாக மரக்கன்றுகளை வழங்குதல், அரிய வகை அழிந்து வரும் மரங்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
மேலும், மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இயற்கை சார்ந்த இவரது இந்தப் பணிகளை பாராட்டி யோகநாதனுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2008ஆம் ஆண்டில் 'பசுமை போராளி' விருதினை, அப்போதைய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி வழங்கி கெளரவித்தார்.
மேலும், தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருது, பெரியார் விருது, டிம்பர் லேண்டின் மர மனிதன் விருது, மத்திய நீர்வளத்துறை காலநிலை போர்வீரர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக 2015ஆம் ஆண்டில் சிபிஎஸ்இ ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இவரைப் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில், நடத்துநராக பணியாற்றும் யோகநாதன் லட்சக்கணக்கான மரங்களை நட்டு வளர்த்து பசுமை புரட்சியில் சாதனை செய்து வரும் நிலையில், நாளை (ஆக.15) டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் 78வது சுதந்திர தின விழாவில் "AT HOME RECEPTION" என நிகழ்வில் யோகநாதனை குடியரசுத் தலைவர் நேரில் அழைத்து கௌரவப்படுத்த உள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'புல்புல்' குருவிக் குஞ்சுகளுக்கு தந்தையாக மாறிய பழ வியாபாரி.. நெல்லையில் ஓர் நெகிழ்ச்சி சம்பவம்!