சென்னை: நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் (Independence day 2024) கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநில காவல்துறையில் இருக்கும் புலனாய்வு பிரிவு, ரிசர்வ் படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த வருடத்திற்கான சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாடு முழுவதும் உள்ள தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, சிவில் டிபன்ஸ், புலனாய்வு பிரிவு காவல் துறை என 1037 நபர்களுக்கு குடியரசுத் தலைவருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் இரண்டு உயர் காவல்துறை அதிகாரிகள் உட்பட 23 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிவில் சப்ளை டிஜிபி ஆக இருக்கக்கூடிய வன்னிய பெருமாள், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் ஆகிய இருவருக்கு சிறப்பான பணிக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் 21 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் காவல்துறை மெச்சத் தகுந்த சேவையை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதில், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக இருக்கக்கூடிய கண்ணன், ஐஜி பாபு, எஸ்பி அந்தஸ்தில் இருக்கக்கூடிய ஐபிஎஸ் அதிகாரிகளான பிரவீன் குமார், அபின்விபு, பெராக்ஸ்கான் அப்துல்லா, சுரேஷ்குமார், கிங்சுலின், பிரபாகரன், பாலாஜி சரவணன், ராதாகிருஷ்ணன் மற்றும் பெண் எஸ்பி சியாமளா உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், டிஎஸ்பிகளான டில்லி பாபு, மனோகரன், சங்கு, ஸ்டீபன் ஆகியோருக்கும், காவல் ஆய்வாளர்கள் அந்தஸ்தில் இருக்கக்கூடிய சந்திரசேகர், சந்திரமோகன், ஹரிபாபு தமிழ்ச்செல்வி, உதவி ஆய்வாளர்கள் முரளிதரன், ரவிச்சந்திரன் ஆகியோருக்கும் காவல்துறை மெச்சத் தகுந்த சேவையைப் பாராட்டி குடியரசுத் தலைவருக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: வேலூர் அருகே ஒரே கிராமத்தில் 3000 ராணுவ வீரர்கள்.. கம்மவான்பேட்டை ராணுவப்பேட்டையாக மாறிய ரகசியம் என்ன?