சென்னை: சித்திரை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சோப கிருது வருடம் முடிந்து 'குரோதி' புத்தாண்டு இன்று (ஏப்.14) தொடங்குகிறது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, எக்ஸ் தளத்தில் அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு: “வைசாகி, விஷு, பிசுப், பஹாக் பிஹு, பொய்லா பொய்ஷாக், வைஷாகாதி மற்றும் புத்தாண்டு ஆகிய பண்டிகைகளின் புனிதமான நேரத்தில், இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் இந்த பண்டிகைகள் நமது பல்வேறு கலாச்சார பாரம்பரியத்தின் துடிப்பான வெளிப்பாடாகும். இந்த பண்டிகைகள் அனைத்தும் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் செய்தியை வழங்குகின்றன. இவ்விழாக்கள் அனைவரின் வாழ்விலும் செழிப்பையும், அமைதியையும் கொண்டு வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்“ என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி: “தமிழ் கலாச்சாரத்தின் துடிப்பான மரபுகள் மற்றும் ஆழமான பாரம்பரியத்தின் வெளிப்பாடாக திகழும் புத்தாண்டு வாழ்த்துகள். வரும் ஆண்டு அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும். இந்த ஆண்டு அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நிறைவைக் கொண்டு வரட்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: “தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நிறைவை அளிக்கட்டும். புதிய உத்வேகம், ஆற்றல், உற்சாகம், தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அம்பேத்கர் பிறந்த நாளில் 'சங்கல்ப் பத்ரா' பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பிரதமர் மோடி - BJP MANIFESTO