டெல்லி: ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை திரும்பப் பெறுவதாக அனிஷ் சேகர் ஐஏஎஸ் தெரிவித்ததைத் தொடர்ந்து, அதனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றார். மேலும், ராஜினாமா திரும்ப பெறப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழக நிர்வாக இயக்குனராக அனீஷ் சேகர் ஐஏஎஸ்-ஐ நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவன மேலாண் இயக்குனராக பொறுப்பு வகித்து வந்த அனீஷ் சேகர் ஐஏஎஸ், தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த மார்ச் 1ஆம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார்.
2011ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான அனீஷ் சேகர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவர். இந்நிலையில் தான் வகுத்து வந்த பதவியை ராஜினாமா செய்வதாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதனை ஏற்றுக் கொண்ட மத்திய பணியாளர் நலத்துறை, அவரை பணியிலிருந்து விடுவிப்பது தொடர்பாக அறிவிக்கை வெளியிட்டது.
அதனை ஏற்ற தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவும், அனீஷ் சேகரின் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்தார். அனீஷ் சேகர் ராஜினாமா செய்த போது, அவர் கேரள மாநிலத்தில் பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அவர் தனது ராஜினாமா முடிவைத் திரும்ப பெறுவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய நிலையில், அதனை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர், அனீஷ் சேகர் ஐ.ஏ.எஸ் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் பணியைத் தொடர அனுமதி அளித்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் அனுமதியைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் முன்னாள் எல்காட் நிறுவனத்தின் இயக்குனராக இருந்த அனீஷ் சேகர் தற்போது இந்திய நிர்வாகப் பணியில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மின்சாரத் துறையில் உள்ள ‘தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகத்தின்’ மேலாண் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகத்தை, தமிழ்நாடு மின்சார கழக மேலாண் இயக்குனர் ராஜேஷ் லக்கானி கூடுதலாக கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'சவுக்கு' சங்கர் என்கிற ஆச்சிமுத்து சங்கர்... அரசு ஊழியர் முதல் அரசியல் சர்ச்சைகள் வரை! - Savukku Shankar Bio