தஞ்சாவூர்: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் இன்று (பிப்.05) மனு ஒன்றை அளித்தனர். இதுமட்டும் அல்லாது, மேகதாது அணை கட்டுவதற்கு, கர்நாடகாவிற்கு ஆதரவாகக் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தின் தீர்மானத்தைச் சட்டவிரோதமென அறிவிக்க வலியுறுத்தி முதலமைச்சருக்குக் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே, ஆணைய கூட்டத்தின் தீர்மான நகலைத் தீயிட்டு எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, பி.ஆர்.பாண்டியன் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் காவிரி உரிமையை மீட்பதற்காக 50 ஆண்டு காலம் போராடி இருக்கிறோம்.
திமுக அரசு, உச்சநீதிமன்றத்தில் காவிரி உரிமை மீட்பிற்காகப் போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற்று தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, விவசாயிகள் சார்பில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 2011-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தீவிரமாகப் போராடியதன் விளைவாக 2013-ல் கெஜட்டில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக அரசு வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியதன் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை அடிப்படையில் மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பி வைத்து கருத்துக்களைக் கேட்கவும், அணை கட்டுவதற்கு ஆதரவான நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு அரசின் பிரதிநிதி சந்தீப் சக்சேனா வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். அதனை மீறி, வாக்கெடுப்பு நடத்திய போது வெளியேறி தமிழ்நாட்டின் எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, சுயநல நோக்கோடு வாக்கெடுப்பில் பங்கேற்றுப் பெற்ற காவிரி உரிமையை மீண்டும் மேகதாது அணை என்கிற பெயரில் திமுக அரசு பலி கொடுத்துள்ளது.
இது குறித்து உண்மை நிலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவுபடுத்துவதோடு, அவசரமாக அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி காவிரி மேலாண்மை ஆணையம் எடுத்த முடிவு சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும். இலையெனில், தமிழ்நாட்டில் மீண்டும் மேகதாது அணை கட்டுமானத்திற்கு எதிராகவும் காவிரி விவசாயிகள் நலனைப் பாதுகாக்கவும், விவசாயிகள் தீவிர போராட்டத்தில் களமிறங்க இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விக்சித் பாரத்: 2047ல் நாட்டின் வளர்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு!