ETV Bharat / state

"விவசாயிகளுக்கு எதிராக ஸ்டாலின் செயல்படுகிறார்" - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு! - p r pandian - P R PANDIAN

P.R Pandian Press Meet: கரூரில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் விவசாயிகளுக்கு எதிராக தமிழக முதலமைச்சர் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாயிகள் பேரணி
பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாயிகள் பேரணி (credits-ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 1:20 PM IST

கரூர்: கர்நாடகாவில் உரிய தண்ணீரைத் தமிழக அரசு பெற்றுத் தரக் கோரியும் ,மேகதாது அணைக் கட்டுமான பணிகளைத் தடுத்து நிறுத்த கோரியும் , தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நீதி கேட்டு, நேற்று திருச்சியில் இருந்து கரூர் மாவட்டம் லாலாபேட்டை, மகாதானபுரம் ஆகிய இடங்களின் வழியாகப் பேரணி நடத்தினர். இதனைத் தொடர்ந்து, கரூர் மாநகர பகுதியில் அமைந்துள்ள லைட் ஹவுஸ் கார்னர் வந்தடைந்த பேரணி, கரூர் உழவர் சந்தை வழியாகக் கரூர் பேருந்து நிலையம் அருகில் மனோகரா கார்னர் ரவுண்டானா பகுதி வந்தடைந்தது.

பின்னர், கரூர் பேருந்து நிலையம் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே பேட்டியளித்த பி.ஆர்.பாண்டியன், "விவசாய நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழக அரசு கைகோர்த்துக் கொண்டு காவிரி நீரைப் பெற்றுத் தர மறுக்கிறது என்றும், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துவதற்குத் தமிழக அரசு மறுப்பு தெரிவித்து வருவதாகத் தெரிவித்தார்.

கேரளா அரசு புதிய அணை கட்டுவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த தமிழக முதலமைச்சர், எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் மௌனமாக இருப்பதாகவும், பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு ஆந்திர அரசைத் தமிழக அரசு அனுமதித்து வேடிக்கை பார்ப்பதாகவும், ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் உள்ள நீர்வளங்களை அழித்துவிட்டு, சிப்காட் அமைப்பதற்கு விலை நிலங்களைக் கையகப்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்குவதற்குத் தமிழக அரசு முனைப்புக் காட்டி வருகிறதாகக் குற்றம் சாட்டினார்

இதற்காக விவசாயிகளின் மீது குண்டர் சட்டத்தை ஏவி தமிழக அரசு ஒடுக்கப் பார்க்கிறது என்றும், டெல்டா விவசாய நிலங்களில் நிலக்கரி, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு விவசாய நிலங்களைத் தாரை வார்த்து, பெரும் முதலாளிகளுக்கு உறுதுணையாக இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்தார்.மேலும் காவிரி நீரைப் பெற்றுத் தர மறுத்தால் விலை நிலங்களை விவசாயிகள் விட்டுக் கொடுத்து விடுவார்கள் என்ற வக்கிர புத்தியுடன் முதலமைச்சர் உள்ளாரா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

இந்தியா முழுவதும் விவசாயிகளின் எதிர்ப்பு எழுந்ததால், பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக அரசு பெரும்பான்மை இல்லாமல் மூன்றாவது முறையாக, ஆட்சி அமைத்துள்ளதாக தெரிவித்தார்.தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகளை சந்திக்க மறுத்து வருவதால், தேர்தல் நேரத்தில் தக்க பாடம் புகட்டுவோம் எனவும் விவசாயிகளின் நலனை விரும்பாத அரசாக தமிழக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலை தொடர்ந்தால் எதிர்வரும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் உள்ள விவசாயிகள் செயல்படுவார்கள் என்றும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக விவசாயிகள் வாக்களித்ததை போல திமுக மு.க.ஸ்டாலின் அரசுக்கும் எதிராக விவசாயிகள் வாக்களிப்பார்கள் என்ற நிலை உருவாகும் என்பதை எச்சரிக்கும் வகையில் தான் இந்த பேரணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். டெல்டா பகுதிகளில் விவசாயிகளுக்கு எதிராக மீத்தேன் வாயு திட்டத்தை நிறைவேற்ற கையொப்பமிட்டவர் தான் தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும், அதை டெல்டா விவசாயிகள் என்றும் மறக்க மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள்" என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "விவசாயிகள் சார்பில் தமிழக முதலமைச்சர் சந்தித்து ஏதும் கோரிக்கை வைத்துள்ளீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, விவசாயிகளைக் கண்டாலே தமிழக முதலமைச்சர் தெறித்து ஓடுகிறார், நாங்கள் எவ்வாறு தமிழக முதலமைச்சரை பார்ப்பது அவர் பணியை அவர் தான் சரியாக செய்ய வேண்டும் விவசாயிகள் கூறி தான் அதை செய்ய வேண்டும் என்ற நிலை தேவையில்லை என தெரிவித்தார்.

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முழு வீச்சில் செயல்படுகிறது. ஆனால் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடகாவில் வசிக்கும் விவசாயிகள் 50 லட்சம் குடும்பங்கள் நூற்றுக்கணக்கான கிராமங்கள் அழியும் என்பதால் கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட, கர்நாடகா அமைச்சர் வி.கே.சிவக்குமாரின் சகோதரர் ரவி, அப்பகுதியில் நாடளுமன்ற தேர்தலில் கர்நாடக விவசாயிகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக சுட்டி காட்டினார்.

கர்நாடகாவைச் சேர்ந்த சோம அண்ணாவுக்கு ஒன்றிய அரசு அமைச்சரவையில் ஜல் சக்தி அமைச்சகத்தில் ஒதுக்கி இருப்பதன் மூலம், தென்னிந்தியாவின் ஒற்றுமையை சீர்குளிக்க மோடி முயற்சிப்பதாக விமர்சனம் செய்தார். தென்னிந்தியாவின் நதிநீர் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக உள்ள கர்நாடகாவுக்கு அமைச்சரவையில், இடம் ஒதுக்கி தென்னிந்தியாவின் ஒற்றுமை மற்றும் அமைதியை சீர்குலைக்க மோடி முயன்றிருக்கிறார் என்பது வெளிப்பட்டு இருக்கிறது" என்று கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி மாற்றம் ஏன்? - சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.