சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிராமணமும் செய்து வைத்தார். இவ்வாறு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இந்த நிகழ்வின்போது, பதவி ஏற்ற பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு பூங்கொத்து அளித்தார். அதனை ஆளுநர், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அளிக்குமாறு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று எழுதிய கடிதத்தில், 13.3.2024 நாளிட்ட கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளபடி, க.பொன்முடி தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கிட ஒப்புதல் அளிப்பதாகவும், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு க.பொன்முடி, கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் தெரிவித்து இருந்தார்.
மேலும், முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று, தற்போது அமைச்சர் காந்தி பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தினை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்வதாகவும், அக்கடிதத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
அமைச்சராக பொன்முடி பதவி ஏற்றதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X வலைத்தளப் பதிவில், "அரசியல் சட்டத்தின் பாதுகாவலராகவும், அரசியல் சாசனத்தையும், உணர்வையும் நிலைநாட்டி, சரியான நேரத்தில் ஜனநாயகத்தைக் காப்பாற்றிய உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு எதிராக கூர்முனைகள் வைக்கப்படுகின்றது. 2024 தேர்தலில் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதும், அரசியலமைப்பை நிலைநிறுத்துவதும் முக்கியமானது. நமது தேசத்தை அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாக பாடுபடவேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதுவை, சிதம்பரம், கரூர் உள்ளிட்ட 15 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! - Tamil Nadu Bjp Candidate List