விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த ஜுன் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜூன் 14 முதல் 21ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.
இதன்படி 64 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர், ஜூன் 24ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின்படி, 35 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், இன்று (ஜூலை 10) வாக்குப்பதிவும், ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, வாக்குகள் எண்ணும் பணியானது பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 107 ஊராட்சிகள், விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 926 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் வாக்களிக்க 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் 662 வாக்குப்பதிவு இயந்திரங்களும் (BALLOT UNIT), 330 கட்டுப்பாட்டுக் கருவியும் (CONTROL UNIT), 357 வாக்கினை உறுதி செய்யும் VVPAT கருவி என மொத்தம் 1,349 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
மேலும், விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள 276 வாக்குச்சாவடி மையங்களில் 3 மையங்கள் மிகவும் பதட்டமானவை என்றும், 42 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வசதியாக 220 மத்திய துணை ரானுவப் படையினர் உட்பட 2,651 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேநேரம், பதட்டமான வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க 53 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இந்த தேர்தல் பணியில் 1,355 அலுவலர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி? - வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள்!