கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை அடுத்து, பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக வசந்த ராஜன் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறியும், அடிப்படை வசதிகள், குடிநீர் பிரச்சினைகள், ஆனைமலையாறு நல்லாறு அணை திட்டம், வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்னைகள் தீர்க்கப்படும் என பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்து வருகிறார்.
இதையடுத்து, பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வெள்ளலூர் பகுதியில் 'நிக்க வச்சு கேளுங்க' என்ற தலைப்பில், பொதுமக்களிடம் வேட்பாளர் வசந்த ராஜன் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது நாகலட்சுமி என்பவர் கூறுகையில், “எங்களுக்கு இலவசம் எதுவும் வேண்டாம், தற்போது குடிநீர் விலைக்கு ரூபாய் 3,000க்கு வழங்குகிறோம், ஆதலால் குடிக்க நல்ல குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். குப்பை கிடங்கு பிரச்சனையை தீர்த்து நல்ல சுகாதாரத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.
இதையடுத்து வேட்பாளர் வசந்த ராஜன் மகன் ராஜ பிரணவ் பேசுகையில், "நாங்களும் இந்த பகுதியில் வசிக்கிறோம். ஆதலால் வெற்றி பெற்றவுடன் சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டு, குப்பைக் கிடங்கு பிரச்சனைகள் தீர்க்கப்படும்" என்றார்.
பின்னர் பேசிய பாஜக வேட்பாளர் வசந்த ராஜன், "தான் வெற்றி பெற்றதும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிகளில் அனைத்து அடிப்படை பிரச்னைகள், குடிநீர் பிரச்சினைகள் தீர்க்கப்படும். குப்பைக் கிடங்கு பிரச்னை தீர்க்கவில்லை என்றால், நான்கு வருடத்தில் நான் ராஜினாமா செய்வேன்" எனக் கூறியுள்ளார். இவ்வாறு கூறியது பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலை ஆரத்தி வீடியோ சர்ச்சை.. நடவடிக்கை எடுக்க கோவை ஆட்சியர் உத்தரவு! - Annamalai Aarathi Video