சென்னை: கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 17 வயதே ஆன டி.குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் உலக செஸ் சாம்பியன்ஸ் போட்டியில் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை விரைவில் எதிர்கொள்ள உள்ளார்.
மேலும், விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு 'சாம்பியன் கேண்டிடேட்ஸ்' பட்டம் வெல்லும் 2வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் குகேஷ், அவரது இந்த வெற்றிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது."வியத்தகு சாதனையைப் புரிந்துள்ள டி.குகேஷ் அவர்களுக்கு எனது பாராட்டுகள். வெறும் 17 வயதில் 'கேண்டிடேட்ஸ்' தொடரின் மிக இளவயது 'சேலஞ்சர்'-ஆக வரலாறு படைத்துள்ளார்.
பதின்பருவத்தில் இத்தகைய வெற்றி வெறும் முதல் வீரராகச் சாதித்துள்ளார். அடுத்து, டிங் லிரன் உடனான உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கான போட்டியிலும் அவர் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி: இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளதாவது, "தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷ் மிக இளம் வயதில் #FIDECandidates சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்: "17 வயது கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ்க்கு வாழ்த்துக்கள். 22 வயதில் இந்த பட்டத்தை வென்ற கேரி காஸ்பரோவின் சாதனை முறியடித்து கேண்டிடேட்ஸ் போட்டியில் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளீர்கள்.
இந்த வெற்றியின் மூலம், நீங்கள் சரித்திரம் படைத்தது மட்டுமின்றி, செஸ் உலகில் இந்தியாவின் இடத்தையும் மீட்டுள்ளீர்கள். இந்த நட்சத்திர சாதனை இளைய தலைமுறையினருக்கு உத்வேகத்தை அளிக்கும். இந்த வெற்றிக்குப் பிறகு உலக சாம்பியனுக்கு சவால் விட நீங்கள் தயாராகும் போது, முழு நாடும் உங்களுக்கு ஆதரவாக நிற்கும்" என பதிவிட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் பதிவில், "சென்னையை சேர்ந்த 17 வயதான வாலிபர் இந்திய செஸ்ஸில் அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக தயாராவதற்கு வாழ்த்துகள். தமிழ்நாடு அரசு குகேஷுக்கு முழு ஆதரவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது" என பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ்க்கு வாழ்த்துகள். உங்கள் உறுதியும் விடாமுயற்சியும் நமது தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது. சதுரங்க உலகில் சாதனை படைக்கவிரும்பும் இளம் திறமையாளர்களுக்கு உங்களது வெற்றி உத்வேகமாக இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: செஸ் கேண்டிடேட்ஸ் போட்டி: 17 வயதில் சாம்பியன் வென்ற தமிழக வீரர் குகேஷ்!