திருநெல்வேலி: திசையன்விளை அடுத்த கரைசுத்து புதூரைச் சேர்ந்தவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங் (60). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், இவர் கடந்த 2 ஆம் தேதி காணாமல் போனதாக ஜெயக்குமாரின் மகன் கருத்தையா உவரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மேலும், ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனையடுத்து மற்றொரு கடிதமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக காங்கிரஸ் முக்கிய தலைவர்களான கேவி தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டவர்களால் ஜெயகுமாருக்கு கொலை மிரட்டல் இருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே, கடந்த 4 ஆம் தேதி அவருக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமாரின் உடலை போலீசார் கண்டெடுத்தனர். ஜெயக்குமாரின் கை, கால்கள் வயர்களால் கட்டப்பட்டு இருந்தன. கடிதத்தில் எழுதப்பட்டிருந்த மரண வாக்குமூல வரிகள் தற்கொலைக்கு தூண்டும்படியாக ஒரு பக்கம் இருந்தாலும், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஜெயக்குமார் உடல் கண்டெடுக்கப்பட்டதால், கொலைக்கான சாத்தியமும் இருப்பதாக போலீசார் கருதினர்.
எட்டு தனிப்படைகள்: சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமார் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதியே நெல்லை எஸ்பி அலுவலகத்திற்கு ஆன்லைன் வாயிலாக புகார் அனுப்பியதாக கூறப்பட்டது. ஆனால், அப்படி எந்த புகாரும் தங்களுக்கு கிடைக்கவில்லை என காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்திருந்தார்.
மேலும், இந்த வழக்கில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளின் பெயர்கள் அடிபட்டுள்ளதால் வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்த 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உட்பட 30 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில் 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பாளையங்கோட்டையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் வீட்டிற்கே சென்று போலீசார் விசாரணை நடத்தினர். உயிரிழந்த ஜெயக்குமார் காண்டிராக்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்ததால் இருவருக்குளான பணப் பரிவர்த்தனை குறித்தும் தனுஷ்கோடியிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய 30 பேரிடமும் தனித்தனியாக விசாரணையை துவங்கியுள்ள நிலையில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேவி தங்கபாலுவிடமும் இன்று சுமார் 30 நிமிடங்கள் விசாரணை நடத்தப்பட்டது.
செல்போன்கள் மாயம்: கடந்த 2 ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட பிறகுதான் ஜெயக்குமார் மாயமாகியுள்ளார். அப்போது அவர் தனது இரண்டு செல்போன்களையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் செல்போன்கள் இல்லை என போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ள அந்த செல்போன்கள் தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
ஜெயக்குமாரின் கடைசி நிமிடங்கள்: ஜெயக்குமார் காணாமல் போன மே 2 ஆம் தேதி அன்று அவர் வீட்டில் இருந்து கிளம்பிய பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை தெரிந்துகொள்ள அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். மே 2 ஆம் தேதி இரவு 10 மணி அளவில் திசையன்விளை பகுதியில் இருக்கும் ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு ஜெயக்குமார் சென்று அங்கிருக்கும் பொருட்களை குறித்து விசாரிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் இருப்பதுதான் ஜெயக்குமாரின் கடைசி நிமிடங்களாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஜெயக்குமாரின் மரணம் கொலையா? தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வரும் நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை பகீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளுறுப்புகள் ஆய்வு: கடந்த 4 ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஜெயக்குமாரின் உடல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனையடுத்து பிரேத பரிசோதனையின் முடிவுகள் நேற்று மாலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் வழங்கப்பட்டது. ஜெயக்குமாரின் உடல் எரிக்கப்பட்டிருந்த நிலையில் பிரேத பரிசோதனையின்போது உடலின் சில உள்ளுறுப்புகள் கவனமாக ஆராயப்பட சென்னை மற்றும் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
காட்டிக்கொடுத்த குரல்வளை: பிரேத பரிசோதனையின்போது ஜெயக்குமாரின் உள்ளுறுப்புகளை ஆராய்ந்ததில் அவரது குரல்வளை முற்றிலும் எரிந்து போயிருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும், அவரது நுரையீரலில் எவ்வித திரவங்களும் இடம்பெறவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, ஏற்கனவே உயிரிழந்த நபரை எரியூட்டினால் மட்டுமே குரல்வளை முற்றிலும் எரிந்து போகுமாம். அதே போல, எரியூட்டப்பட்ட உடலில் உள்ள நுரையீரலில் திரவங்கள் ஏதும் இருக்காதாம். ஜெயக்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களின் அறிக்கையின்படி, ஜெயக்குமார் உயிரிழந்த பிறகு அவரது சடலம் தோட்டத்தில் எரிக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தமிழகத்தை புரட்டிபோட்டுள்ள இந்த வழக்கில் வெளியாகியிருக்கும் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி போலீசார் கொலை வழக்கு பாணியில் விசாரணையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் கடைசி நிமிடங்கள்.. வெளியான சிசிடிவி காட்சிகள்!