திருநெல்வேலி: சென்னையில் இருந்து நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) 11 மணி அளவில், படுக்கை மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட நெல்லை அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனையைச் சேர்ந்த பேருந்து, சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு நெல்லை வந்துள்ளது.
இந்த பேருந்தை கோவில்பட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜேந்திரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். மேலும், இந்த பேருந்தில் முன்பதிவு செய்த பயணிகள் மற்றும் வரும் வழியில் உள்ள பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் ஏறிய பயணிகள் பலர் பயணித்ததாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) காலை 11.20 மணிக்கு நெல்லை வந்த விரைவுப் பேருந்து, நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள பணிமனைக்குச் சென்றுள்ளது. அதன் பின்னர், பேருந்தை பணிமனை ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளனர்.
இதையும் படிங்க: பாபநாசம் அருகே குரங்கு தாக்கியதில் மூதாட்டி உள்பட இருவர் காயம்!
அப்போது, 9ஆம் எண் கொண்ட படுக்கைக்கு கீழ் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு அரிவாள் இருந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், தங்களுடைய உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து பணிமனைக்கு வந்த போலீசார், பேருந்தில் இருந்த ஆயுதங்களைக் கைப்பற்றி, பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் அந்தப் பேருந்தில் பயணித்த பயணிகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்துள்ளனர். அதன் பின்னர், தடயவியல் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு, கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் இருக்கையில் இருந்த கைரேகைகளை பதிவு செய்துள்ளனர்.
இதனை அடுத்து, கைத்துப்பாக்கி மற்றும் அரிவாளை பேருந்தில் பயணித்தவர்கள் கொண்டு வந்தார்களா அல்லது வேறு யாராவது வைத்தார்களா என்ற கோணத்தில் பாளையங்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரவாயலில் 51 வயது நபரைக் கடித்த வளர்ப்பு நாய்.. சென்னை மாநகராட்சி அதிரடி!