சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 22 பேரை செம்பியம் போலீசார் கைது செய்தனர். அதில், 5 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் கடிதம் கடந்த வாரம் வந்தது.
அந்த கடிதத்தில், தனது நண்பனை இந்த கொலை வழக்கில் சிக்க வைத்துள்ளதாகவும், அவனை விடுவிக்காவிட்டால் உங்கள் குடும்பத்தையே காலி செய்து விடுவேன் என்றும், அந்த கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த கடிதத்தை எழுதியவர் என்ற இடத்தில் கேளம்பாக்கத்தை அடுத்த படூர் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த சதீஷ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து சதீஷை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் மிரட்டல் கடிதம் அனுப்பவில்லை என்றும், சதீஷை சிக்க வைக்க இது போன்ற கடிதம் அனுப்பபப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. பின்னர் சதீஷை விடுவித்த போலீசார், இந்த வழக்கு தொடர்பாக கேளம்பாக்கம் போலீசாரிடம் உதவும்படி செம்பியம் போலீசார் கேட்டு கொண்டதாக தெரிகிறது.
கேளம்பாக்கம் போலீசார் சதீஷ் பின்னணி குறித்து விசாரித்து உள்ளனர். அதில், சதீஷ் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநராக இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் யார் என்று கூட தெரியாத படூரைச் சேர்ந்த சதீஷ் பெயரை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கோணத்தில் கேளம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.
அதில், செங்கல்பட்டைச் சேர்ந்த ரோஸ் நிர்மலா என்பவர் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி உள்ளார். அப்போது அவரிடம் தனியார் நர்சரி பள்ளி அங்கீகாரம் பெறும் விவகாரத்தில் கடலூரைச் சேர்ந்த தனியார் பள்ளியின் தாளாளர் அருண்ராஜ் என்பவர் மோதல் போக்கில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரத்தில் பழிவாங்குவதற்காக அருண்ராஜ், செங்கல்பட்டில் உள்ள ரோஸ் நிர்மலா வீட்டின் முன்பு ஆபாச போஸ்டர்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்தாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் கேளம்பாக்கம் போலீசார் பிப்ரவரி மாதம் அருண்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதன்பிறகு அருண்ராஜ் ஜாமீனில் வெளியே வந்து விட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் சாட்சியாக ஓட்டுநர் சதீஷ் இருந்ததால் அவரை பழிவாங்குவதற்காக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்க வைக்க கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரிய வந்தது.
நிர்மலா வீட்டின் முன் ஒட்டிய ஆபாச போஸ்டர், காவல்நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கடிதம், ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மிரட்டல் விடுத்த கடிதம் ஆகிய மூன்றும் ஒரே எழுத்து வடிவம் (Font) உடையது என்பதால் அருண் ராஜ் மிரட்டல் விடுத்து இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலும், சதீஷிடம் புகாரைப் பெற்று கேளம்பாக்கம் போலீசார் மற்றும் செம்பியம் போலீசார் அருண்ராஜை தேடி கடலூர் மாவட்டத்திற்கு சென்ற போது அவர் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது.. போலீசார் நூல் பிடித்தது எப்படி? காங்கிரஸ் தலைமை நடவடிக்கை என்ன? - ARMSTRONG MURDER CASE