சென்னை: பெற்றோருக்கு தெரியாமல் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற 4 பள்ளி மாணவர்கள் வந்தலகுண்டில் வைத்து தனிப்படை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய 4 சிறுவர்கள், நேற்று (நவ.06) டியூஷன் செல்வதாகக் கூறிவிட்டு சென்ற நிலையில், இரவு 8 மணிக்கு பிறகும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுவர்களைப் பல இடங்களிலும் தேடிக் கிடைக்காததால், திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுள்ளனர்.
காட்டிக்கொடுத்த சிசிடிவி
புகாரின் அடிப்படையில், ஆய்வாளர் மில்லர் தலைமையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அதில், 4 சிறுவர்களும் ஆட்டோவில் ஏறி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதனையடுத்து, ஆட்டோவின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரணை செய்ததில், சிறுவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்றது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: "தோற்றாலும் பரவாயில்லை, போட்டியிட்டதே போதும்" 50 கிலோ இட்லியில் கமலா ஹாரிஸ் உருவம்
இதனையடுத்து, நான்கு சிறுவர்களும் கொடைக்கானல் செல்லும் அரசு பேருந்தில் ஏறி வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில், தனிப்படை காவலர்கள் கொடைக்கானல் செல்வதற்காக வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 4 பள்ளி சிறுவர்களையும் பத்திரமாக மீட்டனர்.
சுற்றுலா திட்டம்
தொடர்ந்து, சிறுவர்களிடம் விசாரணை நடத்தியதில், நான்கு சிறுவர்களும் கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்ல வேண்டும் என்று தீபாவளிக்கு முன்னதாகவே திட்டமிட்டுள்ளனர். திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, டியூஷனுக்கு செல்லாமல் கொடைக்கானலுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மீட்கப்பட்ட சிறுவர்களை காவல்துறையினர் பத்திரமாக அவரவர் பெற்றோருடன் ஒப்படைத்துள்ளனர்.
கொடைக்கானல் சுற்றுலா ஆசையில் சென்னையில் இருந்து கிளம்பிய சிறுவர்கள் வத்தலகுண்டில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், புகார் அளித்த 8 மணி நேரத்தில் நான்கு சிறுவர்களை மீட்க சம்பவம் குறித்து, காவல் ஆணையர் சங்கர், திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்