சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், சென்னை திருவான்மியூர் சவுத் அவன்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், மெர்லினா - ஆண்ட்ரோ மதிவாணன் தம்பதியின் வீட்டில் கடந்த ஆண்டு மே மாதம் வீட்டு வேலை செய்வதற்காக ரூ.16 ஆயிரம் மாத சம்பளம் என்ற அடிப்படையில் பணியில் சேர்ந்துள்ளார்.
ஆனால், அந்த பணிப்பெண்ணுக்கு பேசிய சம்பளத்தைக் கொடுக்காமல், மாதம் ரூ.5 ஆயிரம் மட்டுமே கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஜீலை மாதம் அப்பெண் பணி செய்ய விருப்பம் இல்லை எனவும், தான் சொந்த ஊருக்கேச் செல்வதாகவும் மெர்லினா மற்றும் ஆண்ட்ரோ மதிவாணன் ஆகியோரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மெர்லினா மற்றும் ஆண்ட்ரோ மதிவாணன் தம்பதியினர், அப்பெண்ணைக் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்ததாகவும், மேலும் அடித்து துன்புறுத்தி முகம், கை, கால் ஆகிய பகுதிகளில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.
இந்த நிலையில் பொங்கலன்று மெர்லினா, ஆண்ட்ரோ மதிவாணன் தம்பதி இருவரும் அப்பெண்ணை அழைத்துக் கொண்டு பெண்ணின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விட்டுவிட்டு வந்துள்ளனர். அப்போது மகளின் முகம், கை, கால்களில் காயம் இருப்பதைக் கண்ட தாய், உடனடியாக கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மருத்துவமனை அளித்த தகவலின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி போலீசார், நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், தற்போது பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகிய இருவர் மீதும், நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாழ்த்தப்பட்ட வன்கொடுமைச் சட்டம், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், ஆபாசமாகப் பேசுவது, தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் இருவரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR) வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அந்த முதல் தகவல் அறிக்கையில், சிறுமி படிப்பதற்கு பணம் இல்லாததால் திமுக எம்எல்ஏவின் மகன் வீட்டில் வேலை செய்ததாகவும், ஆனால் அவர்கள் தொடர்ந்து தன்னை துன்புறுத்தி வந்ததாகவும், எம்எல்ஏவின் மகன் மருமகள் குடும்பத்துடன் மும்பை சென்றபோது சரியாக உணவு சமைக்கவில்லை எனக் கூறி அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், பச்சை மிளகாய் சாப்பிட சொல்லி கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சூடு வைத்து ரத்தம் சொட்ட சொட்ட அடித்ததாகவும், துணி துவைத்தாலும் அதை சரியாக துவைக்கவில்லை எனக் கூறி எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் அடித்து தொடர்ந்து தன்னை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், மூன்று வருடம் இங்கேதான் வேலை செய்ய வேண்டும், வெளியில் செல்ல முடியாது என கையெழுத்து வாங்கிவிட்டு தன்னை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், வெளியில் சென்றால் உன் தாயை ஏதாவது செய்து விடுவோம் என மிரட்டி, தன் சாதிப் பெயரைச் சொல்லி தொடர்ந்து தாக்கி வந்ததாகவும் அந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காயமடைந்த சிறுமி வீட்டிற்குச் சென்ற பிறகு, அங்கிருந்து உறவினர்கள் அவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், நீலாங்கரை மகளிர் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, தனிப்படை அமைத்து எம்எல்ஏவின் மகன், மருமகள் இருவரையும் தேடி வருவதாகவும், விரைவில் இருவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராமரிடம் மன்னிப்பு.. உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி - அயோத்தி விழாவில் பிரதமர் மோடி!