கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நேற்று(ஏப்.5) பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். இதேபோல திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பல்லடம் பகுதியிலும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் சூலூர் பகுதியிலும் வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாதப்பூர் ஊராட்சியில் தொட்டி பாளையம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட பாஜகவினருக்குப் பிற்பகலிலும், அதிமுகவினருக்கு மாலையிலும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் சூலூர் எம்எல்ஏ கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் குறித்த நேரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் பிரச்சாரத்துக்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொள்ளும் வாகனம் வந்தது. மாநில தலைவர் அண்ணாமலை வேறு வாகனத்தில் வந்த நிலையில், பரப்புரை வாகனம் மட்டும் தனியாக வந்தது.
அதிமுகவினர் பரப்புரை மேற்கொண்டிருந்த நிலையில், பாஜக பரப்புரை வாகனம் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் ஒரு இடத்தில் அதிமுகவினரின் வாகனங்களை ஓவர் டேக் செய்து பாஜகவின் பரப்புரை வாகனம் முன்னால் செல்ல முயன்றது. அப்போது லேசாக அதிமுகவினரின் வாகனத்தில் உரசியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்த அதிமுக மற்றும் பாஜக ஆகிய இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பரப்புரை வாகனத்திலிருந்து இறங்கிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் எம்எல்ஏ கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையின் பரப்புரை வாகனத்தைச் சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாங்கள் சரியான நேரத்தில் பிரச்சாரத்திற்கு வந்துள்ளதாகவும், பாஜக தரப்பு அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து மாதப்பூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் பிரச்சாரத்திற்குக் காவல் துறையினர் அனுமதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர் இரு தரப்பையும் சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்ட நிலையில், அதிமுக வேட்பாளர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தைச் சிறைபிடித்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
இந்த நிலையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் பரப்புரை மேற்கொள்ள விடாமல் இடையூறு செய்ததாக அதிமுகவினர் கருமத்தம் பட்டி காவல் நிலையத்தில் நள்ளிரவில் புகார் அளித்தனர். இது குறித்து அப்பகுதியில் பணியிலிருந்த தேர்தல் பறக்கும் படை பொறுப்பு அதிகாரி வினோத்குமார் கொடுத்த புகாரின் மீது கருமத்தம் பட்டி காவல் துறையினர் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல வாகனத்தைச் சிறைபிடித்து போராட்டம் நடத்திய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மீது இரண்டு பிரிவுகளில் கருமத்தம் பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் அனுமதியின்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இலங்கையில் இருந்து ராமநாதபுரம் வழியாகக் கடத்தப்பட்ட 4.9 கிலோ தங்கம் இந்தியக் கடலோர காவல் படையினரால் பறிமுதல்! - Gold Smuggling