திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பிரபல தனியார் தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றி வந்த நேச பிரபு என்பவர் கடந்த ஜனவரி 24ஆம் தேதி, மர்ம கும்பலால் கொடூரமான முறையில் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, இவ்வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்ள காவல்துறை தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், கடந்த மாதம் வரை இந்த சம்பவம் தொடர்பாக 12 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையைச் சேர்ந்த நபர்களுக்கும், பல்லடம் காவல் நிலையத்தில் சிறப்பு பிரிவு போலீசாக பணிபுரியும் ராஜா சுபின் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், பல்லடம் செய்தியாளர் நேச பிரபு கொடுரமாக வெட்டிய கூலிப்படையினரை தூண்டியதாக, பல்லடம் காவல் நிலைய போலீசார் ராஜா சுபின் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு, ராஜா சுபின் புகார் ஒன்றிற்காக பணம் பெற்றதாக செய்தி ஒன்றை வெளியிட்டதாகவும், அதனால் ஆத்திரத்தில் ராஜா சுபின், கூலிப்படையை ஏவி இந்த கொலைவெறி சம்பவத்தை நிகழ்த்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் காவல்துறை தரப்பில் இதுவரை கைது செய்யப்பட்ட சிறப்பு பிரிவு போலீசார் ராஜா சுபின் குறித்து எந்த விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 5 ஆண்டுகளாக சட்டவிரோத கருக்கலைப்பு செய்து வந்த செவிலியர் மதுரையில் கைது!