ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மனைவி யசோதா (வயது 64). தனது கணவர் இறந்து விட்ட நிலையில், இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மூன்று மகள்களுக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வெகு நேரம் ஆகியும் யசோதா வீட்டை விட்டு வெளியே வராததைக் கண்டு சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் காமராஜ் என்பவர், யசோதாவின் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, யசோதா இறந்து கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், யசோதாவின் மகள்களிடம் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, மாலையில் அனைவரும் வந்து பார்த்துள்ளனர்.
அப்போது மூதாட்டி யசோதா கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் செயின் மற்றும் அரை பவுன் கம்மல் தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகையாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஒருவேளை நகைக்காக தங்களது தாயார் யசோதாவை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் இருந்ததால் உடனடியாக பவானி சாகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், யசோதாவின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் நகைக்காக மூதாட்டியை கொலை செய்து விட்டு, சந்தேகம் வராமல் இருப்பதற்காக கவரிங் நகையை போட்டு விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சொத்து பிரச்சனையில் தாய் மாமன் சுத்தியலால் அடித்து கொலை; கன்னியாகுமரியில் பரபரப்பு!