கோயம்புத்தூர்: கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் உதயகுமார். இவர் கோவையில் பல ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி நித்யாவள்ளி, கோவில்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், உதயகுமார், தனது காரில் பொள்ளாச்சி வரை செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில், மைலேரிபாளயம் அருகே கோழிப்பண்ணை முன்பாக காரில் சென்று கொண்டிருந்த அவரை மர்ம கும்பல் வழிமறித்து, சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின்னர், அவரது காரையே எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உதயகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரிநாராயணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும், "இந்த வழக்கில் முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளன. தனிப்படை போலீசார் விரைவில் கொலையாளிகளை பிடிப்பார்கள்" என்று எஸ்பி பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு; ஏன் மத்திய கமாண்டோ படைகளை அனுப்பவில்லை? - செல்வப்பெருந்தகை கேள்வி!