திருப்பத்தூர்: தோரணம்பதி பகுதியில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கஞ்சா போதையில் அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் போதையில் இருந்த இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருப்பத்தூர் அடுத்த தோரணம்பதி பகுதியை சேர்ந்தவர் ராஜா (60). இவர் தோரணம்பதியில் இருந்து கொரட்டிக்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சாலையை கடப்பதற்காக வாகனத்தை கொரட்டி பகுதியில் தள்ளிக் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நாயக்கனூர் அடுத்த காரக்காரன்கொட்டாய் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (19) ராஜா மீது மோதியுள்ளார்.
இந்த விபத்தில், ராஜா லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதனையடுத்து, விக்னேஷ் தடுப்பு சுவர் மீது மோதி கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த மக்கள் விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராமிய போலீசார், விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில்,வாகனத்தில் அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திய விக்னேஷ் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், நாயக்கனூர் அடுத்த காரக்காரன்கொட்டாய் பகுதியை சேர்ந்த சண்முகம் சுகுணா தம்பதியருக்கு 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், விக்னேஷை தத்தெடுத்து வளர்த்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கஞ்சா போதைக்கு அடிமையான விக்னேஷ் தினந்தோறும் கஞ்சா அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனால், வாகனத்தில் அதிவேகமாக சென்று அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் , அப்பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாகவும், இதனால், இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை சீரழித்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் சுற்றி உள்ளவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டினர்.
எனவே, இது போன்ற விபத்துகளையும், உயிர் சேதங்களையும் தவிர்க்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், காவல்துறையினரும் கவனத்தில் கொண்டு காஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விபத்தில் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆக.19-க்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர்.. அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு! - udhayanidhi stalin deputy cm