கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாநகரம் பீளமேடு பகுதியில், அதிகாலையில் வீட்டில் இருந்த ஐந்து பேரை கட்டிப்போட்டு, கத்தியைக் காட்டி மிரட்டி 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாநகரம், உப்பிலிபாளையம் பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வரும் முகமது என்பவர், பீளமேடு புராணி காலனி பகுதியில் தனது தந்தை, மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (பிப்.7) இரவு 1.30 மணி அளவில் அவரது வீட்டில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், வீட்டில் இருந்த ஐந்து பேரையும் கட்டிப்போட்டு, வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.
பின்னர், சுமார் நான்கு மணி நேரம் அங்கிருந்த மர்ம நபர்கள், அதிகாலை 5 மணிக்கு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். வீட்டின் காவலாளி விடுப்பில் இருந்ததால், கடையில் வேலை பார்க்கும் நபரை காவலுக்கு அமர்த்திய நிலையில், அவரும் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கியதால் சம்பவம் நடந்தது எதுவும் தெரியாமல் இருந்துள்ளது.
தொடர்ந்து, கொள்ளையர்கள் அங்கிருந்து வெளியேறிய பிறகு வீட்டில் இருந்தவர்கள் சத்தமிட்டதால், அங்கு வந்த அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார், சம்பவ இடத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அந்த குடும்பத்தினர் மெக்கா புனித பயணம் செல்வதற்காக பீரோவில் வைத்திருந்த 10 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த கும்பல், பீரோவிலிருந்த சுமார் 20 சவரன் தங்கம், வைர நெக்லஸ், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரம் உள்பட சுமார் 40 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடையில் பணியாற்றுபவர்களுக்கு ஊதியத் தொகை கொடுப்பதற்காக வைத்திருந்த தொகையும் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, உதவி ஆணையர்கள் கணேசன் மற்றும் பார்த்திபன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் கொள்ளையர்களின் முகம் பதிவாகி உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக நான்கு தனிப்படைகளைக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் பயமறியாது படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள்!