மதுரை: மதுரை மாவட்டம், கூடல்நகர் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் 5ம் வகுப்பு பயிலும் 11 வயது மாணவி, பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சிறுமி, வீட்டின் குளியல் அறையில் மயங்கிய நிலையில் கிடந்ததாகக் கூறி, வீட்டில் உள்ளோர் சிறுமியை வள்ளுவர் காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
இதையடுத்து அங்கு சிறுமிக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், சிறுமியை அங்கு அனுமதித்துள்ளனர். அப்போது அங்கு சிறுமி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, உயிரிழந்த சிறுமியின் உடல், உடற்கூறு ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், மதுரை கூடல்புதூர் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சிறுமி குளிக்க சென்றபோது குளியல் அறையில் மயங்கி விழுந்ததாகவும், மருத்துவமனையில் அனுமதித்து முதற்கட்ட சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்ததாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இதையடுத்து, விசாரணை மேற்கொள்வதற்காக சிறுமியின் வீட்டிற்கு சென்ற போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியோடு தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது, சிறுமியின் ஆடைகள் கீழே கிடந்ததைப் பார்த்த போலீசாருக்கு, சிறுமி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், சிறுமியின் உடற்கூறு ஆய்வு முடிவுக்காக தற்போது போலீசார் காத்திருக்கின்றனர்.
மர்மமான முறையில் 11 வயது சிறுமி மதுரையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சிறுமி கொலை செய்யப்பட்டாரா? மரணத்திற்கு காரணம் பாலியல் வன்கொடுமையா? அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா? குடும்பத்தினர் உண்மையை மறைக்க முயற்சிக்கின்றனரா? உள்ளிட்ட பல்வேறு சந்தேக கோணத்தில், தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மாஸ்கோவில் இசை விழாவில் தீவிரவாதிகள் தாக்குதல்..! 40 பேர் பலி..145 பேர் வரை படுகாயம் - ரஷ்யாவில் என்ன நடந்தது? - MOSCOW CONCERT HALL ATTACK