சென்னை: பெரம்பூர் பகுதியில் கடந்த மாதம் ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, சகோதரர் பொன்னை பாலு வடசென்னை ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 24 நபர்களை இதுவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளி திருவேங்கடம் என்பவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை மாறி, மாறி போலீஸ் காலில் எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சம்போ செந்தில் மற்றும் சீசிங்ராஜா ஆகியோரை செம்பியம் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் சம்போ செந்தில் மற்றும் சீசிங்ராஜா ஆகியோருடன் தொடர்பிலிருந்தவர்கள் பட்டியலைத் தயாரித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இவர்களுடன் தொடர்பில் இருந்தாக கூறி வழக்கறிஞர் சிவா, மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில், சென்னையில் வைத்து வழக்கறிஞர் சிவா கைது செய்யப்பட்டார்.
இதை அடுத்து வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் அவர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உடன் அடிக்கடி தொலைப்பேசியில் உரையாடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நெல்சன் மனைவியிடம் விசாரணை: மொட்டை கிருஷ்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முன்பாகவும், அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லும் முன்பாகவும் தொடர்ந்து மோனிஷாவிடம் பேசி வந்தது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாடம், செம்பியம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து அவருடன் ஏன் அத்தனை முறை செல்போனில் தொடர்புகொண்டு பேசினீர்கள், போன்ற விவரங்களைக் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மோனிஷா, "தான் வழக்கு ஒன்று தொடர்பாக வழக்கறிஞர் கிருஷ்ணனுடன் தொடர்ந்து பேசி வந்ததாக" விளக்கம் அளித்துள்ளார்.
நெல்சனிடம் விசாரணை நடத்தத் திட்டம்? ஆனால் வழக்கறிஞர் கிருஷ்ணன்னுக்கு, நெல்சன் குடும்பத்தினர் அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் குடும்பத்துடன் வெளிநாடு தப்பி சென்றுள்ள மொட்டை கிருஷ்ணன் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: காதலர்களை மிரட்டி கூகுள் பே மூலம் பணம் பறிப்பு.. தஞ்சையில் நான்கு பேர் கைது..! பின்னணி என்ன?