சென்னை: சென்னை சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி மாணவர்கள் மத்தியில் மகாவிஷ்ணு ஆற்றிய உரை மூடநம்பிக்கைகளை பரப்பும் விதத்தில் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகள் பற்றி அவதூறான வார்த்தைகளைக் குறிப்பிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக மகாவிஷ்ணு மீது மாற்றுத் திறனாளிகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வேண்டும் என ஏற்கனவே சைதாப்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், விமான நிலையத்தில் இருந்து மகா விஷ்ணுவை போலீசார் அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு கடந்த 7ஆம் தேதி கைது செய்தனர்.
மகாவிஷ்ணு மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, சமூகத்தில் வெறுப்பான தகவல்களை பரப்புவது, பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசுவது, மதம் இனம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது, மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக குற்றம் செய்வது ஆகிய ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கையை பரப்பும் வகையில் பேசியதால் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, செப்.20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு அளித்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க : மகாவிஷ்ணுவை அசோக் நகர் அரசுப் பள்ளிக்கு பேச அழைத்தது யார்? துறை இயக்குநரின் அறிக்கை கூறுவது என்ன? - Mahavishnu inquiry report
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மகாவிஷ்ணுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு குறித்து விசாரித்த நீதிபதி, மகாவிஷ்ணுவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து சைதாப்பேட்டை, அசோக் நகர் பள்ளிகளுக்கு மகாவிஷ்ணுவை நேரில் அழைத்துச் சென்று போலீசார் இன்று (செப்.14) விசாரணை நடத்தினர். அப்போது, ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மகாவிஷ்ணுவின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஆய்வு செய்த போது, சுமார் ரூ.10 லட்சம் வரை பணம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த பணம் வந்த வழிகள் குறித்தும் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இன்றுடன் 3 நாள் போலீஸ் காவல் முடிவடைவதால், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகா விஷ்ணுவை போலீசார் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், மீண்டும் செப்.20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மகாவிஷ்ணு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.