தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, காந்திநகர் முத்துராமலிங்க தெருவைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் கார்த்திக் முருகன் (35). இவர் தனது 10 வயது மகனை காணவில்லை என்று அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் Cr.No. 685/2024 u/s Boy Missing வழக்குப்பதிவு செய்தனர்.
கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகன்நாதன் மேற்பார்வையில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான 3 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கடந்த 10ம் தேதி அன்று சுமார் 6.30 மணி அளவில் காணாமல் போன சிறுவனின் சடலம், பக்கத்து வீட்டு மாடியில் கண்டெடுக்கப்பட்டது. இதன் விளைவாக இந்த வழக்கு 10ம் தேதியன்று சந்தேக மரண வழக்காக (194(3) (iv) BNSS) மாற்றப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்து சிறுவனின் சடலத்தை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இந்நிலையில் சிறுவன் வீட்டு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் சோதனை நடத்திய போலீசார் வீட்டில் இருப்பவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதுவரை அக்கம், பக்கத்தினர் என 50-க்கும் மேற்பட்டவர்களை விசாரணைக்கு அழைத்து சென்று தனிப்படை போலீசார் விசாரித்துள்ளனர். அதில், 9 பேரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க : தூத்துக்குடி சிறுவன் வழக்கு; 'இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை' - காவல்துறை முக்கிய அப்டேட்..!
இந்த சூழ்நிலையில் சிறுவன் கொலை வழக்கில் சிறுவனின் வீட்டின் பின்புறம் உள்ள ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.
முதற்கட்ட விசாரணையில், ஆட்டோ டிரைவர் சிறுவனுக்கு நெருங்கிய உறவினர் என தெரிய வந்துள்ளது. மேலும், இவர் சிறுவனை ஓரினச்சேர்க்கை செய்ய முயன்றதால், சிறுவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறுவன் காணாமல் போனது முதல் அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வரை ஆட்டோ டிரைவர் போலீசாருடன் இருந்து சிறுவனை தேடுவது போல நடித்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ டிரைவரிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.