சேலம்: மேட்டூர் அருகே உள்ள சாணாரப்பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி இந்திராணி (வயது 55). இவர்களுக்கு வளர்மதி என்ற மகளும், கார்த்திக் என்ற மகனும் உள்ளனர். வளர்மதிக்குத் திருமணமான நிலையில், கார்த்திக் புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று (ஜன.26) காலை பணி விஷயமாக ஈஸ்வரன் தோரமங்கலம் சென்றதையடுத்து, இந்திராணி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வீட்டில் வளர்த்து வரும் மாடுகளுக்குத் தீவனம் கொடுப்பதற்காக அவர் மாட்டுக் கொட்டகையில் அமர்ந்துள்ளார். அப்போது அங்குச் சென்ற மர்ம நபர் ஆலோ பிரிக்ஸ் கல்லால் இந்திராணியைப் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த இந்திராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், வழக்கம் போல் மாலையில் அவரது வீட்டிற்குப் பால் வாங்குவதற்காக புஷ்பா என்ற பக்கத்து வீட்டுப் பெண் சென்றுள்ளார். அப்போது, இந்திராணி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார். பின்னர், அக்கம்பக்கம் வசிப்பவர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நங்கவள்ளி போலீசார் இந்திராணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சேலம் மாவட்ட எஸ்.பி அருண் கபிலன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில், ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, கொலை நடந்த இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்ற மோப்பநாய் மீண்டும் வீட்டிற்குத் திரும்பியது.
இந்திராணியின் கொலை சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது திருடுவதற்காகக் கொலை நடத்தப்பட்டதா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் இந்திராணியின் தலை மற்றும் முகம் பலத்த காயமடைந்திருந்த நிலையில், அவரது கழுத்தில் அணிந்திருந்த ஒன்பது பவுன் தங்கத் தாலிக்கொடி மட்டும் காணாமல் போனது தெரிய வந்தது. மேலும், அவர் காதில் அணிந்திருந்த தோடுகள் அப்படியே இருந்தன. இதுமட்டுமின்றி வீடு திறந்து இருந்தும் வீட்டிலிருந்த பொருட்கள் எதுவும் திருட்டுப் போகவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவத்தில் அடுத்தடுத்த சந்தேகங்கள் வலுத்துள்ள நிலையில், காவல்துறையினர் கொலையாளியைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். வீட்டில் தனியாக இருந்த பெண்ணைப் பட்டப்பகலில் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க விருப்பமில்லை; கீழ்வெண்மணியில் குண்டு அடிப்பட்ட பழனிவேல் கருத்து..