சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டம் மற்றும் சமவெளிப் பகுதிகளில் இயல்பை விட 2 டிகிரி - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மிக அதிகமாக இருந்து வருகிறது. வட தமிழக உள் மாவட்டங்களிலும் வெப்ப அலை வீசி வருகிறது. இதேபோல், சென்னையிலும் நாளுக்கு நாள் கோடை வெயில் உச்சத்தை எட்டி வருகிறது.
இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பெரும் அவதிப்படுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, அரசியல் கட்சிகள் சார்பாக ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பலரும் பொதுமக்களுக்கு மோர் வழங்குவது, தண்ணீர் வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மாநில மனித உரிமைகள் ஆணைய புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் காஞ்சனா, சென்னையில் ஆர்.ஏ புரம், வில்லிவாக்கம் மார்க்கெட், வில்லிவாக்கம் பேருந்து நிலையம் என பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கும் வகையில் மண்பானை தண்ணீரை வைத்துள்ளார்.
இதனை அப்பகுதி மக்கள், வெளியில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள், வாகனங்கள் மூலம் கடந்து செல்பவர்கள் என பலரும் அருந்திச் செல்கின்றனர். மேலும், இதுகுறித்து பேசிய காவல் ஆய்வாளர் காஞ்சனா கூறுகையில்,"வெயிலின் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், மக்களின் தாகம் தீர்ப்பதற்காக தன்னால் இயன்ற சிறிய செயலை செய்வதாக" தெரிவித்தார்.
சென்னையில் வில்லிவாக்கம் பேருந்து நிலையம், வில்லிவாக்கம் மார்கெட் பகுதி, ஆட்டோ தொழிற்சங்கம், தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்கள் என 7 இடங்களில் மண்பானைத் தண்ணீரை வைத்து இருப்பதாகவும் கூறினார். மேலும், தொடர்ச்சியாக பல இடங்களில் வைக்க உள்ளதாகவும், நாம் வைப்பது மூலமாக இன்னும் பலர் இதுபோன்று செயல்களில் ஈடுபட்டால் அதுவே மிகப்பெரிய மகிழ்ச்சி எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "எனது சாவுக்கு காரணமானவர்களை.." நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் எழுதியதாக மற்றொரு கடிதத்தில் பகீர் தகவல்!