திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடியைச் சேர்ந்தவர் ராம்குமார் - மீனா தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீனா அதே பகுதியில் உள்ள அவரது தாய்மாமாவான ஜெகதீஸ்வரன் வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த ராம்குமார், ஜெகதீஸ்வரன் வீட்டிற்குச் சென்று அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து, இன்று காலை விவசாயத் தோட்டத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ஜெகதீஸ்வரனை வழிமறித்து உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரிமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதில் நிலைகுலைந்த ஜெகதீஸ்வரனை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தால், மேல் சிகிச்சைக்காக அவர், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த தகவலறிந்த ஆயக்குடி போலீசார் தப்பியோடிய மீனாவின் கணவர் ராம்குமார் மற்றும் அவருடைய நண்பர் உள்ளிட்டவர்களை தீவிரமாக வலைவீசித் தேடிவருகின்றனர். பழனியில் கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில், இருவருக்கும் இடையே இடையூறாக இருந்தாக தாய்மாமனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காவல் நிலையத்தில் மரணம் அடைந்த கவுன்சிலர் விவகாரம்; ஆவடி காவல் ஆணையர் சங்கர் கூறுவது என்ன?