கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டியில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக அங்கு ஹோட்டல் நடத்தி வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி, அவரது கணவர் மகேஷ் குமார், தாயார் பூனம் தேவி, தங்கை மேகா குமாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் குழந்தையை வாங்கிய விவசாயி விஜயன் என்பவரும் கைது செய்யப்பட்டார். விஜனிடம் இருந்து பிறந்து 15 நாட்களே ஆன குழந்தை மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணை: இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பீகார் மாநிலத் தம்பதி அஞ்சலி மற்றும் மகேஷ்குமார் ஆகியோர் ஏற்கனவே கடந்தாண்டு ஆந்திராவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராம்பாபு என்பவருக்கு ஆண் குழந்தை ஒன்றை விற்பனை செய்திருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தையினையும் போலீசார் மீட்டனர். இரு குழந்தைகளையும் மீட்ட போலீசார் அவர்களை சைல்டு லைன் அமைப்பின் மூலம் பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் ராம்பாபுவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று லாரி ஓட்டுனர்.ராம்பாபுவை பிடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓட்டுநர் ராம்பாபு அடிக்கடி ஆந்திராவில் இருந்து கருமத்தம்பட்டி அருகே உள்ள தொழிற்சாலைக்கு பொருட்களை ஏற்றி வந்த நிலையில், பீகார் மாநில குடும்பத்தினருடன் தொடர்பு ஏற்பட்டு குழந்தையை வாங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனிடையே பீகார் மாநில தம்பதி அஞ்சலி மற்றும் மகேஷ் குமார் ஆகியோர் வேறு யாருக்கும் இதே போல குழந்தைகளை விற்பனை செய்திருக்கிறார்களா? என்பது குறித்து விசாரிக்க, அவர்கள் இருவரையும் காவலில் எடுக்க கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
நாளை புதன்கிழமை இதுகுறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் போது, வேறு யாருக்கும் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும், இந்த குழந்தைகள் விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்த தகவல்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவையில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை விற்ற பீகார் தம்பதி பிடிப்பட்டதை அடுத்து மேலும் ஒரு குழந்தை விற்பனை விவகாரம் தெரிய வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காவல் நிலையம் முன்பு பெண்ணிடம் செல்போன் பறிப்பு - பதைபதைக்க வைக்கும் காட்சி!