திருச்சி: நாடு முழுவதும் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கீழ், நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக சுங்கச்சாவடிகளை அமைத்து கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த சுங்கச் சாவடியில் வருடத்திற்கு இருமுறை கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி, மனித நேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 இடங்களில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் திருச்சி, தஞ்சை, நாகை, அரியலூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக, போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வேனில் வந்தவர்களுக்கு சுங்க கட்டணம் வசூலித்ததால், மனிதநேய மக்கள் கட்சியினர் சாவடியை அடித்து நொறுக்கப் போவதாக கூறியதால், போலீசார் சமரசம் செய்து அந்த சுங்க கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொடுத்தனர்.
இதையும் படிங்க: சுங்கச்சாவடிகளுக்கு எதிராக ம.ம.க போராட்டம்; அடித்து நொறுக்கப்பட்ட துவாக்குடி சுங்கச்சாவடி!
பின்னர், சுங்கச்சாவடி முன்பு அப்துல் சமது தலைமையில் போராட்டம் நடைபெற்ற நிலையில், மனித நேய மக்கள் கட்சியினர் தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வரும் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி கண்ணாடி, கேமரா, வாகனத் தடுப்பு கட்டைகள் ஆகியவற்றை உடைத்தனர்.
இந்த நிலையில், திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நேற்று முற்றுகையிட்டு நடந்த போராட்டத்திற்கு அனுமதி இல்லாமல் கூடியது, சுங்கச்சாவடியை சேதப்படுத்தியது என 2 பிரிவுகளில் மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது உள்பட 300 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.