சென்னை: சமீபத்தில் 2024 மக்களவைத் தேர்தலில், கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வியடைந்ததைக் கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரியில் ஆட்டின் தலையில் அண்ணாமலை புகைப்படத்தைப் போட்டு நடுரோட்டில் ஆட்டை திமுகவினர் பலியிட்டனர். அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களிலும் பரப்பினர்.
இதில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இதே விவகாரம் தொடர்பாக சிவபிரகாசம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், பாரத், ஆசைத்தம்பி, ராமன் ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் புலன் விசாரணை நடந்து வருவதாகவும், ஆடு பலியிட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்ததா என்பதையும் விசாரிக்க காவேரிப்பட்டினம் காவல் ஆய்வாளரை அறிவுறுத்தியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை பொறுப்புத் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : “வன்மத்தை வைத்து அரசியல் வளர்க்கக் கூடாது” - எம்பி துரை வைகோ பேச்சு! - MP Durai Vaiko