வேலூர்: தடை செய்யப்பட்ட 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 605 கிலோ போதைப் பொருட்கள் கடத்தி வந்த காரை காட்பாடி போலீசார் துரத்திப் பிடித்துள்ளனர். இந்நிலையில் தப்பி ஓடிய கார் ஓட்டுநரைத் தேடும் பணியில் போலேசார் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் காட்பாடி, கிறிஸ்டியன் பேட்டை, குடியாத்தம், பொன்னை சேர்க்காடு உள்ளிட்ட மாநில எல்லைப் பகுதிகளில் போலீசார் தொடர்ந்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். காட்பாடி டிஎஸ்பி சரவணன் உத்தரவின் பேரில் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், உதவி ஆய்வாளர் கார்த்தி ஆகியோர் கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அதிவேகமாக வந்த காரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் காரை நிற்காமல் சென்றதால், சந்தேகமடைந்த போலீசார், சுமார் 6 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பள்ளிக்குப்பம் அருகே காரை மடக்கிப் பிடித்தனர்.
போலீசாரை கண்டவுடன் கார் ஓட்டுநர் காரை விட்டு இறங்கித் தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து போலீசார் காரில் சோதனை மேற்கொண்டபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குக் கடத்தி வரப்பட்ட 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 605 கிலோ ஹான்ஸ், கூலிப், பான் மசாலா, உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்துள்ளது.
இதையடுத்து குட்கா பொருட்கள் மற்றும் ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலி நம்பர் பிளேட் கொண்ட வாகனத்தில் வந்து தப்பி ஓடிய நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சினிமா படபாணியில் கடத்தல் காரை ஆறு கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று போலீசார் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.