மயிலாடுதுறை: மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி மயிலாடுதுறையில் தேர்தல் நாளன்று (ஏப்ரல் 19) மகாதானத் தெரு டிபிடிஆர் தேசிய துவக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 143, 144-இல் வாக்காளர் பட்டியலில் 400-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. மகாதானத் தெரு, பட்டமங்கலத்தெரு உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த வாக்காளர்கள் இதனை அறியாமல் ஓட்டுப்போட வந்தபோது தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களது பெயர்கள் நீக்கப்பட்டதை கண்டித்தும், தங்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கக் கோரியும், மகாதானத் தெரு டி.பி.டி.ஆர். தேசிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி முன்பு மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் உள்ளிட்ட 100-க்கும் மேலோனார் தேர்தலின் போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: "வெற்றி பெற்றால் 60 நாட்களில் அனைத்தையும் நிறைவேற்றுவேன்" - மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் உறுதி! - Lok Sabha Election 2024
இதனை அடுத்து கூடுதல் ஆட்சியர் சபீர் ஆலம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுரேகா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, மயிலாடுதுறை காவல்நிலைய போலீசார் சட்டவிரோதமாகக் கூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக, 143, 341 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் பாமக மாவட்ட தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் என 100 பேர் மீதும் இன்று மயிலாடுதுறை காவல்நிலையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'பறவைக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை தேவை'- அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தல் - Bird Flu H5 N1 Spread