தேனி: தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப் பெரியாறு விவசாய நீர்ப்பாசன கால்வாய் உள்ளது. இதன் மூலம், சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் இரு போக நெல் சாகுபடியினை செய்து வருகின்றனர். ஆகையால், விவசாயத்திற்காக பொதுப்பணித்துறை மூலம் நாள்தோறும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்பொழுது இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு விவசாய நீர் பாசன கால்வாய் மூலம், விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறையினர் போதிய அளவில் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் உத்தமுத்து கால்வாயில் கடந்த சில நாட்களாக வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், வட மாநில பதிவு எண் கொண்ட லாரிகளில், மோட்டார் பயன்படுத்தி தண்ணீரினை எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த விவசாயிகள் தண்ணீரினை எடுத்துச் செல்வதால், நெல் விவசாயப் பாசனத்திற்கு போதிய அளவில் தண்ணீர் கிடைக்காது எனக் கூறி பொதுப்பணித் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரைத் தொடர்ந்து, உத்தமபாளையம் காவல் நிலையத்தில் தண்ணீர் திருடுபவர்கள் குறித்து பொதுப்பணித் துறையினர் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு வந்த வட மாநிலத்தவர்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் மோட்டாரையும் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது புகார் அளித்ததும் விரைந்து நடவடிக்கை எடுத்து, விவசாயப் பாசனத்திற்காக வரும் தண்ணீரைத் திருடிய வட மாநிலத்தவர்களை கைது செய்த போலீசாரையும், பொதுப்பணித் துறையினரையும் விவசாயிகள் பாராட்டினர்.
இதையும் படிங்க: ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தெலங்கானா, புதுச்சேரி கூடுதல் பொறுப்பு!