சிவகங்கை: காரைக்குடி அருகே வங்கியில் வாடிக்கையாளர்களின் ரூ.2 கோடி மதிப்புள்ள 533 சவரன் தங்க நகைகளுக்கு பதிலாக, கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, சிவகங்கை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையில், மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான குழுவினர் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டனர். அப்போது, கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வங்கியில் அடைமானம் வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்ததில் அவை தங்க நகைதானா? என அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து, நகைகளை முறைப்படி பரிசோதனை செய்ததில், அவை அனைத்தும் கவரிங் எனத் தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்கள் அடைமானம் வைத்த தங்க நகைகளுக்குப் பதிலாக கவரிங் நகைகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வங்கி மேலாளர் உள்ளிட்ட பணியாளர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதும், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 533 சவரன் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 'ரேர் பீஸ் சேட்டா'.. இல்லாத இரிடியதுக்கு 2 கோடி.. கேரளா தொழிலதிபருக்கு கோவையில் அடிச்ச ஷாக்!
இதன் மதிப்பு ரூ.2 கோடியே 3 லட்சத்து 86 ஆயிரம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடி தொடர்பாக மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, கல்லல் வங்கி கிளை மேலாளர் பட்டுக்கோட்டையை அருகே கோட்டைக்குளம் மேலமேட்டை சேர்ந்த விக்னேஷ்(34), காளையார்கோவில் அருகே புதுக்கண்மாயைச் சேர்ந்த உதவி மேலாளராக ராஜாத்தி (39), மோசடிக்கு உதவி செய்த கல்லலைச் சேர்ந்த ரமேஷ்(38), சதீஷ் (21) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த மோசடி சம்பவம் நகையை அடகு வைத்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. வங்கியில் நகை அடகு வைப்பதுதான் பாதுகாப்பு என அவசர தேவைகளுக்காக மக்கள் வங்கிகளை நாடும் நிலையில், வங்கியில் இந்த மோசடி நடந்துள்ளது மக்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, சிவகங்கை பிள்ளையார்பட்டியில் உள்ள தேசிய வங்கியில் அடைமானம் வைக்கப்பட்ட நகை மோசடி நடைபெற்ற நிலையில், தற்போது கல்லலிலும் அதுபோன்று மோசடி நடைபெற்றது வங்கி வாடிக்கையாளர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்