திருப்பத்தூர்: வாணியம்பாடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள கடைகளில் 5 கடைகளின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து, கடையில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அதே போன்று கடந்த 9ஆம் தேதி வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி, முருகன் கோயில் பூட்டை உடைத்து இரண்டு பெரிய உண்டியல் மற்றும் கொய்யாங்கொல்லி பகுதியில் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 3 அரை சவரன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுப்பட்டு வரும் மர்ம நபர்கள் குறித்து, வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனிப்படை போலீசார் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் விசாரணை மேற்கொண்ட நிலையில், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த, பெரிய மோட்டூர் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 27) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சுந்தர வேல் (45) இருவரை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், வாணியம்பாடியில் 5 கடைகளின் பூட்டை உடைத்து பொருள்களை எடுத்துச் சென்றது, கோயில் பூட்டை உடைத்து உண்டியல் கொள்ளையில் ஈடுபட்டது மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் இவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் குற்ற வழக்குகளில் தருமபுரி சிறையில் இருந்த நிலையில், இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக இணைந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து, அவர்களிடமிருந்து 2 உண்டியல்கள், மூன்றரை சவரன் தங்க நகை, ரூ. 2 ஆயிரத்து 150, மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய ஆயுதங்களான கடப்பாரை மற்றும் 4 கை உரைகள் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுல் செய்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தமிழில் செயற்கை நுண்ணறிவு - ஆராய்ச்சி நிறுவனங்களுக்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு