சென்னை: மேற்கு தாம்பரம் அடுத்த மாந்தோப்பு மீனாம்பாள் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். வழக்கறிஞராக உள்ள இவர், இவர் அதே பகுதியில் அடுக்குமாடி வீட்டில், தனது மனைவி பிரியா மற்றும் மகன் விஷால் மற்றும் அவரது தாயாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (பிப்.7) இரவு தியாகராஜன் வீட்டில் இருந்து வெளியே சென்ற போது, அவரது மனைவி பிரியா, மகன் விஷால் மற்றும் அவருடைய தாயார் என மூவரும் வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் இருந்து உள்ளனர்.
அப்போது, வீட்டின் ஹால் பகுதியில் மாற்றப்பட்டிருந்த கண்ணாடி திடீரென கீழே விழுந்து நொறுங்கி சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. கண்ணாடி உடையும் சத்தம் கேட்டதும், வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், கண்ணாடி உடைந்திருந்ததை வந்து பார்த்தபோது, அந்த இடத்தில் துப்பாக்கி குண்டு ஒன்று இருந்துள்ளது.
இதனால் பதறிப்போன குடும்பத்தினர், இது தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் காவல்துறை அதிகாரிகள் இச்சம்பம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
மேலும், துப்பாக்கி குண்டுயை கைபற்றி அவை எந்த வகையை சேர்ந்தது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், துப்பாக்கி குண்டு எப்படி வீட்டிற்குள் பாய்ந்தது, அந்த பகுதியில் யாராவது உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளார்களா என பல கோணங்களிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, அருகாமையில் இருக்கும் விமானப்படை குடியிருப்பு பகுதியில் இருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்திருக்குமா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பாய்ந்த துப்பாக்கி குண்டு சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆட்டோ சங்கரின் சகோதரர் மோகனுக்கு ஒரு மாதம் விடுப்பு; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!