சென்னை: சென்னையில் உள்ள தனியார் பள்ளியில், அப்பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி, ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கமாக சிறுமியை ஒருவர், அவரது வேனில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2019 நவம்பர் 29ஆம் தேதி வழக்கம் போல சிறுமியை பள்ளியில் இருந்து வேன் ஓட்டுநர் அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், சிறுமியை வீட்டில் விடாமல், தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஓட்டுநரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட நபர் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி காவல்துறை நிரூபித்துள்ளதால், அவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது எனக் கூறி தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, பாதிக்கப்பட்டோர் மீட்பு நிதியில் இருந்து, அரசு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறி உத்தரவிட்டார்.