விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்ததை தொடர்ந்து, அத்தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் ஜுலை 13ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், போட்டியிடும் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில், காணை ஒன்றியத்திற்குட்பட்ட ஆசாரங்குப்பம் கிராமத்தில் திமுக கிளைச் செயலாளர் ராமலிங்கம் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்க பரிசுப் பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக பாமகவினருக்கு இன்று தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையிலான பாமகவினர், திமுக கிளைச் செயலர் ராமலிங்கம் வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட புதிய சட்டைகள், வேஷ்டிகள், 100க்கும் மேற்பட்ட புடவைகள் உள்ளிட்டவற்றை வெளியே தூக்கி வந்து, தெருவில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தேர்தல் அலுவலர்களும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகக் கூறி பாமகவினர் முழக்கமிட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, இந்த சம்பவம் குறித்து திமுக நிர்வாகி மீது புகார் அளித்தும், எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, அதனை கண்டிக்கும் விதமாக இன்று மதியம் 12:30 மணி அளவில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு பாமகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சொகுசு காரில் கட்டுக் கட்டாக சிக்கிய ரூ.1 கோடி.. பின்னணி என்ன? - Vikravandi by election