திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்க மாநிலத் தலைவருமான டி.கே.ராஜாவின் மகன் ஞானகுருவின் திருமண விழாவில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, தனியார் விடுதி ஒன்றில் வைத்து, அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு வெற்றியைக் கொடுத்துள்ளார்கள். மக்களுடைய முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதேநேரம், மக்கள் நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த தேர்தலைப் பொறுத்தவரை, மக்கள் சின்னத்தை பார்த்து வாக்களித்தார்கள், வேட்பாளரைப் பார்த்து வாக்களிக்கவில்லை. காமராஜர் மற்றும் அண்ணா போன்றவர்களில் காலத்தில் நல்ல நேர்மையான, உண்மையான வேட்பாளர்களை நிறுத்தப்பட்டனர். அந்த நம்பிக்கையில் மக்கள் அப்போது மக்கள் சின்னத்தை பார்த்து வாக்களித்தனர்.
ஆனால், அதன் பின்னர் உள்ள வேட்பாளர்கள் நம்பிக்கை இல்லாதவர்களாகவும், நேர்மையற்றவர்களாகவும், இன்னும் பலர் குற்றம் சாட்டப்பட்டவர்களாகவும் உள்ளனர். இத்தகைய வேட்பாளர்களுக்கு தமிழக மக்கள் வெற்றி அளித்துள்ளது வேதனை அளிக்கிறது" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "திமுக அரசு ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் சாதனைகள் என்று சொன்னால் எதுவும் இல்லை. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் பத்து சதவீதம் மட்டுமே செய்துள்ளனர். குறிப்பாக, சமூக நீதி சார்ந்த வாக்குறுதிகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.
ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வு ரத்து என்று கூறினார்கள், மின்கட்டணத்தை மாதம் ஒருமுறை கணக்கெடுக்கப்படும் என்று கூறினார்கள், அதுவும் இதுவரை நடக்கவில்லை. மாறாக, ஐந்து முறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். அப்படி கட்டணத்தை ஏற்றியும் மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறி வருகின்றனர்.
மேலும், ஆட்சிக்கு வந்த பிறகு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவோம் எனக் கூறினர், அதுவும் நடத்தவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விருப்பம் என்று கூறிக் கொண்டு, தங்களிடம் அதிகாரம் இல்லை என முதலமைச்சர் பொய் சொல்லி வருகிறார்.
திமுகவினர் தங்களை பெரியாரின் வாரிசு, சமூக நீதி எங்கள் மூச்சு என்ற வசனங்கள் எல்லாம் பேசிக்கொண்டு இருக்கின்றனர். உண்மையாக சமூக நீதி, பெரியார் மீது மரியாதை இருந்தால், ஒரு வாரத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி சமூக நீதியை நிலை நாட்டுவீர்கள்.
சமூக நீதிக்கும், திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும், 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தருவோம் என்று கூறி, மக்களை ஏமாற்றி வருகின்றனர். இது குறித்து எந்த மேடையில் வேண்டுமானாலும் விவாதம் பண்ண நான் தயார். யார் வேண்டுமானாலும் வரட்டும். விவாதம் செய்ய நான் தயார்" என சவால் விடுத்தார்.
இதையும் படிங்க: "விவசாயிகளுக்கு எதிராக ஸ்டாலின் செயல்படுகிறார்" - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு!