சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (புதன்கிழமை) சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் இட ஒதுக்கீடு மற்றும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரம் உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, பேசிய அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தவறான தகவலை சொல்லியிருக்கிறார். பீகாரில் சாதிவாரியான கணக்கெடுப்பை அந்த மாநில அரசு தடை செய்தது என்று கூறினார். ஆனால், அங்கு இட ஒதுக்கீடுகள் பிரச்னைதான் நடைபெற்று கொண்டிருக்கிறதே தவிர, சாதி வாரியான கணக்கெடுப்பு நடந்துள்ளது.
தற்போது முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க தயங்குகிறார். அவர் திடீரென இந்த எண்ணத்திற்கு எப்படி வந்தார். கருணாநிதி எந்த அடிப்படையில் வன்னியர்களுக்கு MBC என்று தமிழ்நாட்டில் வழங்கினார். அருந்ததியர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், வன்னியர்களுக்கு மட்டும் ஏன் உள் ஒதுக்கீடு வழங்க மறுக்கிறீர்கள்?
தமிழகத்தில் இரண்டு பெரிய சமூகங்கள் உள்ளன ஒன்று வன்னியர்கள், இன்னொன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தினர். இவர்களை முன்னேற்றினால் தான் தமிழ்நாடு முன்னேறும். சட்டமன்றத்தில் மக்களின் வாழ்வாதார பிரச்சனையை குறித்து பேசும் போது அமைச்சர் சிவசங்கரோடு சேர்ந்து முதலமைச்சர் சிரிக்கிறார்.
வட மாவட்டங்களில் வன்னியர்கள் அதிகம் உள்ளனர். ஆனால், தென் மாவட்டங்களில் வன்னியர்கள் இல்லை. இட ஒதுக்கீடு அடிப்படையில் தென் மாவட்டங்களில் MBC பிரிவைச் சேர்ந்த வேறு சமூக மக்களை நிரப்பலாம். அனைவர்க்கும் கல்வி வேலை வாய்ப்பு கொடுங்கள். கலைஞர் இருக்கும் போது இருந்த திமுக வேறு, தற்போது இல்லை" எனக் கூறினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திமுக தயங்குகிறது: தொடர்ந்து பேசிய அவர், "சமுதாயத்தில் பின் தங்கிய நிலை என்பது மாநில அரசு தான் கணக்கு எடுக்க வேண்டும். மத்திய அரசு வெறும் இந்த சாதியில் எத்தனை மக்கள் இருப்பார்கள் என்றுதான் கணக்கு எடுப்பார்கள். மக்களின் நிலையை அறிந்து அதன் படி கணக்கீடு செய்யப்பட்டு, அதன்படி வேலை வாய்ப்புகள் இட ஒதுக்கீடுகள் அளிக்க வேண்டும்.
சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கு தயங்குகிறார்கள். ஆனால் அதை தவிர மற்ற அனைத்து கணக்கெடுப்புகளையும் எடுக்கிறார்கள். கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு கணக்கெடுப்பு நடத்த அனுமதி உள்ளது. ஆனால் முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இருந்தும் கணக்கெடுப்பு எடுக்க தயங்குகிறார்.
குரூப் 4 தேர்வுகளில் மட்டுமே வன்னியர்கள் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் குரூப் 1-ல் மிகவும் குறைவாகத்தான் வேலை கிடைக்கிறது. நாங்கள் இட ஒதுக்கீடு அனைத்து சமூகத்திற்கும் தனித்தனியாக கேட்டோம், ஆனால் அவர்கள் மொத்தமாக கொடுத்துள்ளனர். தற்போது உள் ஒதுக்கீடு கேட்டுள்ளோம் பல்வேறு காரணங்களைக் கூறி அனைவரையும் திசை திரும்புகின்றனர்.
இந்த சாதிவாரி கணக்கெடுப்பை செயல்படுத்தவில்லை என்றால், முன்பு நடத்திய போராட்டத்தை விட இன்னும் கடுமையான போராட்டம் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். பலர் வித விதமாக என்னை விமர்சகின்றனர். ஆனால் பொது வெளியில் பேச தயங்குகிறார்கள். பொது விவாதத்திற்கு நான் தயாராக உள்ளேன்" என்றார்.
கள்ளச்சாராய விவகாரத்தில் ஆளும் கட்சி உடந்தை: பின்னர் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் குறித்து பேசுகையில், "கள்ளக்குறிச்சியில் நடந்தது படுகொலை. இதற்கு முழு காரணம் முதலமைச்சரும் தமிழக அரசும் தான். ஏற்கனவே செங்கல்பட்டில் இதே போல சம்பவம் நடந்தது அப்போது CBCID விசாரணை நடத்தி, கண் துடைப்பிற்காக நடவடிக்கை எடுத்தனர்.
இந்த வருடமும் இதேபோல நடந்துள்ளது. இந்த சம்பவம் ஆளும் கட்சியின் உடந்தையோடு தான் நடக்கிறது. அந்த பகுதியில் 30 வருடங்களாக கள்ளச்சாராயம் விற்கின்றனர். அந்த பகுதியில் சட்டமன்ற உறுப்பினரின் தம்பி தான் இதை செய்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். அரசியல் பெரும் புள்ளிகள் இதில் சம்பந்தபட்டுறிகின்றனர்.
எனவே சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். காவல் துறை அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர். அடுத்த முறை இந்த மாதிரியான சம்பவம் நடைபெற கூடாது என்பதற்காக தான் நாங்கள் கேட்கிறோம். ஆனால் எங்கள் மீதே வழக்கை பதிவு செய்துள்ளார்கள்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு: 'குப்பைத்தொட்டிக்கு தான் போகும்'.. தீர்மானத்தில் இதையும் சேருங்க.. - வேல்முருகன் கொடுக்கும் ஐடியா!