சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) தலைவர் மற்றும் 14 உறுப்பினர் பதவிகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே தலைவர் மற்றும் 10 உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்தன. ஆகையால், இந்த பதவிகளை நிரப்புவதற்காக 10 உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான பெயர்களையும், தலைவர் பதவிக்கு டி.ஜி.பி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற சைலேந்திரபாபுவின் பெயரையும், ஆளுநருக்கு கோப்பு மூலம் தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசு அனுப்பிய கோப்புக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த ஆளுநர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி, எதன் அடிப்படையில் இவர்கள் தகுதி வாய்ந்தவர்கள் எனத் தேர்வு செய்யப்பட்டதாக கேள்வி எழுப்பியதோடு, அதற்கான விளக்கத்தையும் அளிக்குமாறு கோப்பை திருப்பி அனுப்பி இருந்தார்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக சைலேந்திரபாபு நியமன பரிந்துரை செய்யப்பட்டதற்கான காரணங்கள், அதற்காக பின்பற்றப்பட்ட சட்ட விதிமுறைகள், நீதிமன்ற வழிகாட்டுதல்கள், தேர்வாணையத்தின் சட்ட விதிகள் அடங்கிய விவரங்கள் உள்ளிட்டவை ஆவணங்களாகத் தயார் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
மேலும், ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கான பதில்களும், விளக்கங்களும் அதில் இடம் பெற்றிருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான கோப்புகளை மீண்டும் திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அதற்கான அனுமதியினையும் அளிக்காமல் இருந்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழக ஆளுநரின் செயல்பாடுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு அரசின் மனித மேலாண்மைத் துறையின் செயலாளர் நாகராஜன் அரசாணை ஒன்றை வெளியிட்டார். அதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு எம்.பி.சிவனருள் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), சரவணகுமார் ஐ.ஆர்.எஸ், தவமணி, உஷா சுகுமார், பிரேம்குமார் ஆகிய 5 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் நியமனம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், "தமிழகத்தின் தனிப்பெரும் சமூகத்தை புறக்கணிப்பதுதான் சமூகநீதியா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் கூட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. தமிழ்நாட்டின் தனிப்பெரும் சமுதாயம் வன்னியர் இனம். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகவும், உறுப்பினராகவும் நியமிக்க தகுதியான பலர் அச்சமுதாயத்தில் உள்ள நிலையில், அவர்களை புறக்கணிப்பதுதான் சமூக நீதியா? வாழ்க தமிழக அரசின் சமூகநீதி" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆற்காடு அருகே பழமை வாய்ந்த ஆலமரம் அகற்றம்; ஒப்பாரி வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய பாமக பசுமை தாயகம் அமைப்பினர்..!