தருமபுரி: தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இலக்கியப்பட்டியில் பாமக சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “திமுக சட்டமன்றத் தேர்தலில் 44 வாக்குறுதிகள் தருமபுரி மாவட்டத்திற்கு அளித்தார்கள் அதில் ஒன்று கூட நிறைவேற்ற வில்லை. நான் கருணாநிதியின் பேரன். ஸ்டாலின் மகன் என்று உதயநிதி பேசி விட்டு சென்றார்.
திமுக வாக்குறுதி என்னானது? உதயநிதி இம்மாவட்டத்திற்கு வந்தால் அவருக்கு சமூக நீதி பற்றி பேச வரும். இந்த மாவட்டத்திற்கு வந்தால் வன்னியர்களைப் பற்றி ஞாபகம் வரும். அவ்வளவு தான். அரசு ஊழியர்களே 2021 சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து திமுகவை வெற்றி பெற வைத்தீர்கள். அவர்கள் மூன்று ஆண்டு காலத்திலே உங்களுக்கு கொடுத்த வாக்குறுதி ஏதாவது ஒன்றை நிறைவேற்றினார்களா?.
திமுகவை தோற்கடிக்க வேண்டும்: பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்ற வாக்குறுதி அளித்தார்கள். அதை நிறைவேற்றினார்களா. கொண்டு வரவும் இல்லை. இனி கொண்டு வர போவதுமில்லை. கொண்டு வருவதற்கு ஒரே ஒரு வாய்ப்பு இருக்கிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக திமுகவை தோற்கடித்தால் தான் ஸ்டாலின் அடுத்த மாதமே கோரிக்கையை நிறைவேற்றுவார்.
மொரப்பூர் தருமபுரி ரயில்வே திட்டம்: அதை செய்தால் அதற்காக ஆயுள் முழுவதும் நான் உங்களுக்கு கடமைப்பட்டவன். என்னை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தீர்கள். 2014 முதல் 2019 வரை எத்தனை முறை உங்களை நான் சுற்றி சுற்றி வந்தேன். எத்தனை திட்டங்களை உங்களுக்காக கொண்டு வந்தேன். 80 ஆண்டு கால கனவு திட்டம் மொரப்பூர் தருமபுரி ரயில்வே திட்டத்திற்காக 19 முறை அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்தித்து திட்டத்தைக் கொண்டு வந்தேன்.
ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறார்: கடந்த தேர்தலில் நீங்கள் ஒரு தவறு செய்தீர்கள். ட்விட்டர் மற்றும் பேஸ்புக் அரசியல் செய்யும் செந்தில் குமாரை உங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்தீர்கள். எவ்வளவு பெரிய தவறை நீங்கள் செய்தீர்கள். ஐந்தாண்டு காலத்தில் இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காக எதாவது செய்தாரா?. எதையும் செய்யவில்லை. எல்லா திட்டங்களையும் நான் கொண்டு வந்தேன். அதற்கு அவர் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறார்.
தருமபுரி காவிரி உபரி நீர் திட்டம் வேண்டுமென போராட்டம் செய்தேன். கையெழுத்து இயக்கம் நடத்தினேன். ஓட்டுக்காக நான் இதை சொல்லவில்லை. தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவே செய்தேன். இந்த தேர்தலில் சௌமியா அன்புமணிக்கு ஒரு வாய்ப்பு வழங்குகள். மூன்று ஆண்டுகளில் மொரப்பூர் தருமபுரி ரயில்வே திட்டத்தை கொண்டு வருகிறேன்” என்று பேசினார். இந்த பிரச்சாரத்தின் போது தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் உள்ளிட்டர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: "400 இடங்களைப் பிடித்து ஆட்சியமைப்போம்" - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை! - Lok Sabha Election 2024